மரிய புஷ்பம் இல்லம்




மரியபுஷ்பம் இல்லம்
மரியபுஷ்பம் அவசர அவசரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தாள். அலமாரி, பீரோ, லாப்ட், பெட்டிகள், பழையசாமான்கள் கிடக்கும் அறை என தேடிக்கொண்டே போனாள். அவள் தேடியது கிடைக்கவில்லை. கணவன் வரும் வரைதான் தேட முடியும். அவன் வந்தால் தேட முடியாது. மணி நாலாகி இருந்தது. வரும் நேரம் தான். பீரோவின் மேலே ஃபைல் போல ஏதோ தென்பட்டது. எம்பி எடுக்க முயற்சித்தாள். வாசலில் அழைப்பு மணிச் சத்தம் கேட்டது.
……….
புஷ்பமும் எல்லோரையும் போல முப்பத்து முக்கோடித் தேவர்கள் புடைசூழ நிகழும் மங்களகரமான வருடத்தில் இருவீட்டார் அழைக்க விஜயனுக்கு மனைவியானாள். விஜயன் தனியார் மில்லில் சூப்பர்வைசர். ஷிஃப்டுகள் மாறிமாறி வரும். காவேரிப் பாலம் தாண்டி ஸ்ரீரங்கத்துக்குத் திரும்பும் வழியில் மாம்பழச் சாலையில் வீடு பிடித்திருந்தார்கள்.
புஷ்பத்திற்கு அந்த வாழ்க்கை பிடித்திருந்தது. விஜயனுக்கு பகல் ஷிஃப்டு இருக்கும் வாரங்களில் வாரத்துக்கு மூன்று முறை டவுனுக்குப் போனார்கள். மூச்சிறைக்க ஏறிப்போய் மலைக்கோட்டை விநாயகரைப் பார்த்தார்கள். கிருஷ்ணபவனில் சாப்பிட்டார்கள் வில்லியம்ஸில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டார்கள். கரு பரிசோதனை பாஸிடிவ் என வந்தது. விஜயன் உலகத்தில் அதற்கு முன் யாருக்குமே குழந்தை பிறக்காததைப் போல சந்தோஷப்பட்டான். விஜயன் காலண்டரில் நாட்களைக் கணக்கிட ஆரம்பித்தான். ‘இது ஃபிப்ரவரி. அப்ப அக்டோபரில் நம்ம வீட்டுக்கு குட்டிப்பாப்பா வந்துரும்
அக்டோபர் வரை விஜயனால் காத்திருக்க முடியவில்லை. நைட் ஷிஃப்ட் முடிந்து மூன்று மணிக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தான்.  பைக்கில் காவேரிப் பாலத்தில் திரும்புகையில், டிரைவர் ஓய்வு எடுக்க, க்ளீனரின் கன்னி ஓட்டத்தில் வந்த லாரி விஜயனைத் தண்ணீரில்லாத காவேரி மணலுக்குள் தூக்கி எறிந்துவிட்டுப் போனது. உலர்ந்துகிடந்த காவேரி விஜயனின் ரத்தத்தை வேகவேகமாக உறிஞ்சியது.
·          
அம்மா வீட்டில் பொறுப்பு முடிந்ததென நிம்மதி பெருமூச்சு விட்டவர்கள் புஷ்பாவின் வரவைக் கண்டு பயந்தார்கள். நீ இங்கேயே இருந்து விடமுடியாதென அன்றாடம் பல செயல்களின் வழி சொன்னார்கள். இந்தப் படகு தன்னை ரொம்ப நாள் தாங்காதென புஷ்பாவுக்குத் துலக்கமாக தெரிந்தது.
சான்றிதழை மறுபடியும் தூசித் தட்டி எடுத்தாள். தான் படித்த டி.ஃபார்ம் படிப்பு மருந்து வாங்க மட்டுமே பயன்படப் போகிறதென நம்பியவள், இனி சாப்பிட்டிற்கும் அதுவே வழிபுரிந்து கொண்டாள்.
மெடிக்கல் ஷாப்பிற்கு வேலைக்குப் போக ஆரம்பித்தாள். சொற்பச் சம்பளம். இவளோடு சேர்த்து இன்னொரு பெண் மாத்திரமே.  பாலக்கரை மார்க்கெட் பக்கத்தில் மருந்துக் கடை இருப்பதால் எப்போதும் கூட்டம். மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்து வாங்குபவர்கள் ஏராளமாக இருந்தார்கள். தலைவலி, காய்ச்சல் என புஷ்பாவை ஒரு மருத்துவராய் மதித்து தங்கள் உபாதைகளைச் சொல்வார்கள். புஷ்பா மிகக் கவனமாகக் கேட்டு மருந்துகளைக் கொடுப்பாள். கூட வேலை பார்க்கும் வேணிக்கு இந்தச் சிக்கல் எல்லாம் கிடையாது. பத்தாவது ஃபெயில். புஷ்பா சொல்லும் மருந்துகளை எடுத்து கவரில் போட்டு கொடுப்பதோடு சரி. முதலாளியம்மாள் நாற்காலியிலிருந்து எழ மாட்டாள்.
ஒன்றுக்கிருக்க கூட நேரம் இருக்காது. அப்படிப் போக வேண்டும் என்றாலும் சாவி எடுத்துக்கொண்டு இரண்டாவது மாடி போக வேண்டும். பேருக்குத்தான் கழிப்பறையில் பூட்டு உண்டு. வந்தவர் போனவர்கள் எல்லாம் புழங்கினார்கள். வயிற்றில் இருக்கும் குழந்தை மூக்கை பொத்திக் கொள்ளும் அளவுக்கு நாற்றம். ஒரு முறை மேலே போய் வருவதற்குள் படாதபாடு படுவாள். முதலாளியம்மாளுக்கு அடிக்கடி போய் வருவது பிடிக்காது. புஷ்பாவுக்கு போய் வந்த மாத்திரத்தில் மறுபடியும் போகவேண்டும் போலத்தோன்றும். நாள் முழுக்க நின்று கொண்டே இருக்க வேண்டும். மதியம் ஒரு மணி நேரம் சாப்பாட்டு இடைவெளி நேரம். முதலாளியம்மாள் இல்லாத நேரங்களில் வேணி அவளை வேலையே செய்யவிட மாட்டாள். நீ உட்காருக்கா நீ உட்காருக்காஎன்பாள்
இருவரும் மதியம் சேர்ந்துதான் சாப்பிடுவார்கள். ஷட்டரை இறக்கி விட்டு கால் அசர, அரைமணி நேரம் தரையில் உட்காருவார்கள். குழந்தை அசைவது வயிற்றில் நன்றாக தெரியும். வேணியை கைவைத்து பார்க்கச் சொல்வாள் வேணி கூச்சத்தோடு கைவைத்து ஆச்சரியமாய் ஆமாக்க ஆமாக்கா அசையுது’ என்பாள். விஜயனின் முகம் புஷ்பாவிற்கு ஞாபகத்திற்கு வரும். டுக்கி வைத்திருக்கும் பேம்பர்ஸ் பொதி மீது தன் முகத்தை மறைத்துக் கொள்வாள்.
மடத்திற்காக மொத்தமாய் மருந்து வாங்க வரும் நான்சி சிஸ்டர் புஷ்பாவை எப்போதும் கரிசனமாய் விசாரிப்பாள். ஓய்வாக இருந்தால் ஞாயிற்றுக்கிழமை மடத்திற்கு வா என அடிக்கடி அழைப்பாள்.
ஞாயிற்றுக் கிழமை மதியத்திற்கு மேல் கடை கிடையாது. ஒரு ஞாயிறு மதியம் சிஸ்டரை பார்க்கப் போனாள். அதுவரை அங்கியில் மாத்திரமே பார்த்த நான்சி சிஸ்டர் சேலையில் வேறு ஆளாய், அழகாய் இருந்தாள். நல்ல தேநீர் தந்தார்கள். இருவரும் மைதானத்தைத் தாண்டி தேவாலயத்திற்குப் போனார்கள்.
இயேசு நீலநிற நியான் ஒளிப் பின்னணியில் சிலுவையில் இருக்க, நான்சி சிஸ்டர் ”நான் உனக்காக ஜெபிக்கிறேன்” என்றாள். அந்த இடம் புஷ்பாவை என்னவோ செய்தது. சாந்தம் கிட்டுவதைப் போல் உணர்ந்தாள். அடிக்கடி அங்கு வரவேண்டும் என நினைத்துக் கொண்டாள். வரவும் செய்தாள்.
ஒரு மாலை பிரார்த்தனை முடிந்த சமயம். நான் கிறிஸ்டீன் ஆயிடலாம்ன்னு நினைக்கிறேன் சிஸ்டர். எனக்குப் பிடிச்சிருக்கு.
நான்சி சிஸ்டர் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை.
நல்லா யோசிச்சு முடிவு செய் புஷ்பா. இது வாழ்க்கைக்குமான முடிவு, நல்லா யோசி. அப்படியே முடிவு செய்தாலும் குழந்தை பிறந்த பின்னாடி செய். அதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது.
அரசு வேலைக்கு நாளிதழ்களில் விளம்பரம் வந்திருப்பதாகவும் அதற்கு புஷ்பாவை விண்ணபிக்கவும் சொன்னாள்.
·          
குழந்தை பிறந்த மூன்றாவது மாதம் வீட்டில் யாரும் ஒத்துக்கொள்ளா விட்டாலும் மகனோடு சேர்ந்து மதம் மாறி ’மரிய புஷ்பம்’ ஆனாள். மகன் ஜார்ஜ் ஆனான். ஜார்ஜ் என்ற சொல்லுக்குள் விஜயன் எங்கோ ஒட்டிக்கொண்டிருப்பதாக அவளுக்கு ஒரு சந்தோஷம்.
அவளுடைய ஞானஸ்னான நிகழ்வில்தான் சிஸ்டர் நான்சி சகாயத்தை அறிமுகப்படுத்தினாள். அவன்தான் நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்தான். இவளுடைய வேலை பற்றிய பேச்சு வர, தானும் அதே சுகாதராத் துறையில்தான் வேலை பார்ப்பதாகவும் விரைவில் ஃபார்மசிஸிட் வேலைக்கான இண்டர்வியூ நடக்கப் போவதாகவும் சொன்னான்.
அதன் பிறகு சகாயம் அடிக்கடி அவளை சந்தித்தான். மணவிலக்கு பெற்று, எட்டாவது படிக்கும் மகளோடு தனியாக இருந்தான் சகாயம். ஞானஸ்னான ஆல்பத்தைக் கொண்டு வருகிறேன் கொண்டு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான். தனியாக இருப்பதன் துயரத்தை பேச்சில் கோடிடுவான்.
வேலைக்கான இண்டர்வியூ கார்டு வந்தபோது சகாயம் கேட்ட கேள்விக்குப் பின் தான் மரியத்திற்கு அந்த புதிய சிக்கல் தெரிந்தது.
சர்டிஃபிகேட்படி நீ எம்.பி.சி தானே?’
‘ஆமா’
‘ஆனால் மதம் மாறிட்டா, இப்ப நீ பி.சி. எம்.பி.சி.க்குதான் இந்த வேலைக்கு வாய்ப்பு அதிகம்’
’அப்ப என்ன செய்யலாம் சகாயம்.’
’நீ கிறிஸ்டீனா மாறினதைச் சொல்ல வேண்டியதில்லை. புஷ்பாவாவே இண்டர்வியூக்குப் போ’
அப்படியே செய்தாள்.
வேலை கிடைத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில், கம்பி வலைக்கு அந்தப் பக்கம் அமர்ந்து காலை இரண்டு மாத்திரை ராத்திரி இரண்டு மாத்திரை என கவுண்ட்டரில் கொடுக்க ஆரம்பித்தாள்.
’சகாயம் நீங்க மட்டும் அந்த யோசனையை சொல்லலேனா நான் அந்த மெடிக்கல் ஷாப்பிலேதான் இருந்திருப்பேன்.’
’நீ நல்லா இருந்தா எனக்கு சந்தோஷம்.’
மரியத்திற்கு சகாயத்திற்குள் விஜயன் தென்பட்டான்.
·          
அதிக ஆட்கள் இல்லை. நான்ஸி சிஸ்டரும் சகாயத்தின் நண்பர்கள் சிலரும் வர பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். ஜார்ஜுக்கு ஒன்றரை வயதாகி இருந்தது. சகாயத்தின் மகள் திருமணத்துக்கு வரவில்லை. பரீட்சை நடந்துகொண்டிருப்பதாக சகாயம் கூறினான். சகாயத்தின் அக்கா மாத்திரம் வந்திருந்தாள். பதிவுத் திருமண புகைப்படங்களையும் ஞானஸ்னான நிகழ்வு புகைப்படங்களையும் ஒரே ஆல்பத்தில் போட்டுக் கொண்டு வந்துக் காண்பித்தான் சகாயம்.
செந்தனீர்புரத்திற்கு குடிபோனார்கள். சகாயத்தின் மகள் விடுமுறைக்கு மாத்திரம் வந்து போவாள். சில விடுமுறைகளுக்கு சகாயத்தின் அக்கா வீட்டிற்குப் போய் விடுவாள். மரியம் அவளை நன்றாகவே பார்த்துக் கொள்வாள் ஆனாலும் அவள் மரியத்திடம் ஒட்டவே இல்லை.
திருவெறும்பூர் பக்கம் தான் முன்பு வாங்கிப் போட்ட இடத்தில் வீடு கட்டலாம் என சகாயம் சொன்னான். மரியமும் சந்தோஷமாக சரியென்றாள். அவளுக்கு தன் வீட்டுடனான உறவு அறவே இல்லாததாகியிருந்தது.
வீடு கட்டும் வேலை நடந்து கொண்டிருக்க ஹவுஸிங் லோனில் முதல் கட்டமாக எட்டு லட்சம் வாங்கிக் கொடுத்தாள். மற்றதைத் தான் பார்த்துக் கொள்வதாக சகாயம் சொல்லியிருந்தான். நாள் போக மறுபடியும் மறுபடியும் பணம் கேட்டான். அங்குமிங்கும் புரட்டிக் கொடுத்தாள். ஒரு கட்டத்தில் தன்னால் முடியவில்லை என்றாள்.
ஏற்கனவே மரியம் ஆஸ்பத்திரியில் யாரோடு பேசுகிறாள் சிரிக்கிறாள் என சந்தேகம் தொனிக்க கேட்பான். இருவரும் ஒரே துறை என்பதால் சுலபமாக அவளை அவனால் கண்காணிக்க முடிந்தது.
அவள் வேலை செய்யும் ஆரம்ப சுகாதார நிலையம் திருச்சி புதுக்கோட்டை சாலையில்
ஒர் உள்ளடங்கிய கிராமத்தில் இருந்தது.  மெயின்ரோட்டில் இறங்கி நான்கு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். நடந்து போகும்போது சக ஆண் பணியாளர்கள் யாரேனும் வண்டியில் கடந்தால் மருந்துவமனைக்கு வண்டியில் கூட்டிக்கொண்டு போவது அங்கு நீண்ட கால வழமை. வண்டியில் போனதால் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நேர்ந்து விடவில்லை. நடந்து போனால்தான் அதற்கு நிறைய வாய்ப்பு இருந்தது. அவள் என்றைக்கேனும் யாருடனாவது வண்டியில் போனால் அன்று மாலையே சகாயத்துக்குத் தெரிந்துவிடும். கடுமையாக சண்டையிடுவான் அடிப்பதும் உண்டு. ஜார்ஜ் இதையெல்லாம் அறிந்தும் அறியதவனாகவும் பால்வாடி ஆயாக்களிடமும், அம்மாவிடமும் வளர்ந்துகொண்டிருந்தான். சகாயம் எல்லாவற்றையும் கேள்வி கேட்பான். ’உனக்குத்தான் ரெண்டு மணிக்கே ட்யூட்டி முடிஞ்சிருதே? நாலு மணி வரைக்கும் அங்க என்ன பண்ற?’ ‘டாக்டரே நாலு மணிக்குத்தான் போறாரு அதுக்குப் பிறகுதானே புறப்பட முடியும்?’
அந்த பதிலையெல்லாம் சகாயம் மதிக்கவே மாட்டான். ஒரு கட்டத்தில் இதைத் தாங்க முடியாத மரியம் ‘என்னை விட்ரு சாமி.. நான் போறேன்’ என கத்த சகாயம் மிக சாவதானமாக ‘அப்பிடியெல்லாம் போயிட முடியாது உன் ஞானஸ்னான போட்டோவையும், சர்ச்சில மதம் மாறினதுக்கான ஆதாரத்தையும் டிபார்ட்மெண்ட்ல காண்பிச்சா நீ ஜெயிலுக்குப் போயிடுவே. அரசாங்கத்தை ஏமாத்தி வேலை வாங்கிட்டு, என்ன டபாய்க்கிறியா? ஒழுங்கு மரியாதையா இருடி முண்ட’
மரியபுஷ்பம் நடுங்கிப் போனாள். போலீஸ், ஜெயில். வேலைநீக்கம்…. ஜார்ஜை எப்படி வளர்ப்பது.. மரியத்துக்கு காய்ச்சல் வருவதுபோல் இருந்தது. அதன்பின் இருவரும் பேசிக்கொள்வது அறவே நின்று போனது.
ஜார்ஜ் இருக்கும் பக்கமே சகாயம் திரும்பமாட்டான். புது வீட்டிற்கு குடிபோனார்கள். மரிய புஷ்பம் இல்லம் என பெயரிட்டிருந்தான். புதுமனைப் புகுவிழாவில் சுரத்தே இல்லாமல் இருந்தாள் மரியம். அவளுடைய ஆட்கள் என்று யாரும் இல்லை. இரண்டொரு நர்ஸ்களைத்தவிர. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மலங்க மலங்க விழித்து பதில் சொன்னாள்.
அதன்பின்தான் அது தொடங்கியது எங்கும் எப்பொழுதும் தேட ஆரம்பித்தாள். வீட்டின் மூலைமுடுக்கெல்லாம் அந்த ஆல்பத்தை தேடிக்கொண்டே இருந்தாள். அம்மா பழையமாதிரி இல்லையென. ஜார்ஜ்க்கு ஒரு மாதிரி புரிந்தது.
சகாயத்தின் மகளுக்கு அவளது அக்காவீட்டில் வைத்து நிச்சயம் நடந்தது. அங்கு போனபொழுதும் தான் படுத்திருந்த அறை, சமையலறை என எல்லாவற்றிலும் தேடிக் கொண்டிருந்தாள் மரியம். மருத்துவமனைக்கு யாரேனும் ஆல்பம் போல் ஏதேனும் கொண்டு வந்தால் பயந்து விடுவாள். சீஃப் டாக்டர் எதற்கேனும் அவளைக் கூப்பிட்டு கடுமையாகப் பேசினாள், விஷயம் தெரிந்துவிட்டதோ என அன்றைக்கு முழுவதும் படபடப்பாக இருப்பாள். யாருக்கேனும் தெரிந்து விடும் என தேவாலயத்துக்கு போவதை அறவே நிறுத்திவிட்டாள். ஜார்ஜை சகாயத்துக்கு பிறந்த குழந்தை என்று நிறைய பேர் நினைத்ததால் அவன் பெயர் பற்றி சந்தேகம் வரவில்லை. மரியம் வீட்டிற்கு யாரையும் கூப்பிட்டு வரவே மாட்டாள்.
அவளுக்கு ஒரு மாதமாகவே சந்தேகமாக இருந்தது. மருத்துவமனையில் பரிசோதித்தபொழுது கர்ப்பம் என வந்தது. அவளுக்கு அந்தக் குழந்தையை பெற்றுக் கொள்ள அறவே விருப்பமில்லை. அவளுடைய ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருவை கலைக்க முடியாது. மருத்துவமனைக்கு கிளம்புவதுபோல் கிளம்பி தனியார் மருத்துவமனைக்குப் போய், தெரிந்த டாக்டரிடம் சொல்லி கலைத்துக் கொண்டாள். ஒரு மாதிரி சமாளித்து ஆட்டோவில் வீடு போய் சேர்ந்தாள். அதுவும் எப்படியோ சகாயத்துக்கு தெரிந்துவிட்டது. கடுமையாக அடித்தான். மரியம் பதிலுக்கு கத்தினாள். ‘குடுடா அந்த ஆல்பத்த’ ஜார்ஜ் வளர்ந்திருந்தான். அம்மாவை கைபிடித்து அவர்கள் அறைக்குள் இழுத்தான். அதிலிருந்து இரண்டு மாதம் கழித்து மரியம் குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்துகொண்டாள்.
சகாயம் வீட்டில் சமையலுக்கு ஆள் வைத்தான். மாத்திரைகளை மாற்றிக் கொடுத்து விடுகிறாள் என மருத்துவமனையிலிருந்து புகார்கள் வர ஆரம்பித்தன. ஒரு நோயாளிக்கு மருந்தை மாற்றிக் கொடுத்து பெரும் சிக்கலாகி விஷயம் பெரிதாகாமல் எல்லோரும்  கூடி மூடி மறைத்தார்கள். சகாயத்தை அழைத்து சீஃப் டாக்டர் பேசினார். ’சைக்ரியாட்டிஸ்ட் யார்டையாவது கூட்டிட்டு போங்க. லாங் லீவ் எடுத்துக்கச் சொல்லுங்க. சென்ஸிடிவ் ஜாப் இல்லையா?’ சகாயம் எல்லாவற்றுக்கும் தலையாட்டினான்.
மனநல மருத்துவர் நிறைய கேள்விகள் கேட்டார். சினிமாவில் வருவதுபோல் அல்லாமல் சுத்தமாக முகச்சவரம் செய்தவராய் இருந்தார். ‘இவன்தான் டாக்டர் என் பொருள் ஒன்ன ஒளிச்சி வைச்சிருக்கான். அதை தந்துட்டான்னா நான் சரியாயிருவேன் டாக்டர்’ டாக்டர் சகாயத்தை பார்க்க அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல் தலையாட்டினான்.
நான்ஸி சிஸ்டர் அவளை சில வருட இடைவெளிக்குப்பின் பார்த்த பொழுது நம்ப முடியாத அளவுக்கு மரியம் உருக்குலைந்திருந்தாள். அக்கம்பக்கம் பத்து முறை பார்த்துகொண்ட பின்னே நெற்றியில் சிலுவையிட்டுக்கொண்டாள். அவளுக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரைகள் அவளை உறக்கத்திலேயே வைத்திருந்தன. விழித்த சமயத்திலும் உறக்கக் கலக்கத்திலேயே இருந்தாள். அப்பொழுதும் தட்டுத்தடுமாறி தேடிக்கொண்டிருப்பாள்.
***
அழைப்பு மணிச் சத்தம் மறுபடி கேட்க, அவசர அவசரமாய் பீரோவின்  மேலே ஃபைல் போல் இருக்கிறதென எம்பி எடுக்க முயற்சித்தவள், மறுபடி விடாது மணிச்சத்தம் ஒலிக்க, பதட்டமாகி,  அப்படியே பின்தலை தரையில் பட விழுந்தாள்.
மருத்துவமனையில் ஒரு வாரமாய் கண்விழிக்காமல் கிடந்தாள். கை மாத்திரம் காற்றில் எதையோ தேடிக்கொண்டே இருந்தது. அவளுடைய நாற்பத்திமூன்றாவது பிறந்தநாளுக்கு எட்டுநாள் இருக்கையில் நினைவு திரும்பாமலே மரித்தாள் மரியபுஷ்பம். முறையாக கல்லறைக்கு இடம் வாங்கி அவளை அடக்கம் செய்தான் சகாயம்.
ஜார்ஜ் விடுதிக்கு போனான்.
மகள் மென்பொருளாயினி ஆகி அமெரிக்கா போனாள். ஜார்ஜ் வீட்டிற்கு வருவதேயில்லை. விடுமுறை நாட்களை நண்பர்கள் வீட்டிலே மாறி மாறி இருந்து கழித்தான்.
சகாயம் மாத்திரம் வீட்டில் மரிய புஸ்பத்தின் முதலாண்டு நினைவு தினத்திற்கு கல்லறைக்கு போனான். அவனுக்கு முன்னால் யாரோ மெழுகுவர்த்தி ஏற்றியிருந்தார்கள். ஒரு குத்து செடியொன்று முளைத்திருந்தது. அது காற்றில் அடுகையில் புஷ்பத்தின் கை போல தோன்றியது.
 திரும்பி வந்த பொழுதிலிருந்துதான் அது அவனுக்கு தொடங்கியது.  எல்லாவற்றையும் திறந்து வைக்க ஆரம்பித்தான், வீட்டுக் கதவு, பீரோ, அலமாரி, என எல்லாக் கதவுகளையும் திறந்து வைக்க ஆரம்பித்தான்.
பின்பக்கத்தில் இருக்கும் பாத்ரூம் கதவை திறந்து வைத்து குளிக்க ஆரம்பித்த பொழுதுதான் அடுத்த வீட்டுக்காரர்களுக்கு பிரச்னையானது. சமயங்களில் செப்டிக் டேங்க் மூடிகளையும் திறந்தான் ஒருகட்டத்தில் தெருவில் இருக்கும் எல்லாவீட்டின் காம்ப்பவுண்ட் கதவுகளையும் திறக்க ஆரம்பித்தான். அவன் அக்காவை தேடிப்பிடித்து தெருக்காரர்கள் சொல்லிவிட்டு வந்தார்கள். அவள் கர்த்தருக்குள் நித்திரை ஆகும் நாளுக்காக காத்திருந்தாள். அமெரிக்காவில் இருக்கும் மகள் அத்தையிடம் சம்பளத்துக்கொரு ஆளைப் போட்டு பார்க்கச் சொன்னாள்.
தேவபிச்சைக்கு மாதம் மூவாயிரம் சம்பளம், வீட்டோடு தங்கியிருக்க வேண்டும். சாப்பாடு அங்கேயே சமைத்துக்கொள்ளலாம். தேவபிச்சைக்கு ஏடிஎம் செக்யூரிட்டி வேலையைவிட இது சௌகரியமாய் இருந்தது. நாள் முழுக்க கதவுகள் திறக்கப்பட, மூடப்பட ஏசியும் இவனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. வெளியே படுத்தால் ஏரியாக்காரர்களின் தொல்லை நடுஇரவில் வரும் போலீஸ்காரர்களுக்கு எழுந்து பீட்நோட் கொடுக்க வேண்டும். மிஷினில் பணமில்லையென்றால் இவனிடம் கோபப்பட்டார்கள். இங்கிலீஷ் கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு போனார்கள்.
இங்கே அப்படி எந்த பிரச்னையும் இல்லை. சகாயம் விழித்திருக்கும்போது விழித்திருக்க வேண்டும். அவன் திறப்பதையெல்லாம் பூட்ட வேண்டும். வேளாவேளைக்கு மருந்து மாத்திரை கொடுக்க வேண்டும். பிரச்னையில்லாமல் மூன்று மாதம் முடிந்திருந்தது.
பிச்சை அன்றைக்கு சமைக்கவில்லை. சகாயத்திற்கு பக்கத்து தெருவிலிருந்து சாப்பாடு வரும். சகாயம் அன்றைக்கு சீக்கிரமே சாப்பிட்டான். இவன்கொடுத்த மாத்திரைகளையும் போட்டுக்கொண்டான். தேவபிச்சை தான்போய் பத்துநிமிடத்தில் சாப்பிட்டுவிட்டு வருவதாக சொல்லிவிட்டு கவனமாக கதவுகளை பூட்டிவிட்டு புறப்பட்டான். பொதுவாக வீட்டில் திறப்பதற்கான எல்லாவற்றையும் பிச்சை பூட்டுபோட்டு பூட்டியிருந்தான் சகாயத்தின் ஒன்றுக்கு இரண்டுக்கு எல்லாமே உள்ளேதான்.
அந்தச் சின்னஉணவகத்தில் நல்ல கூட்டமிருந்தது ஆட்கள் எழுந்திருக்க பிச்சை காத்திருந்தான். ஒரு பைக் சைடில் மட்டபலகை கட்டியிருக்க வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவனை எங்கேயோ பார்த்த மாதிரியிருந்தது அவனது மூளை தனது ஞாபகக்குப்பைகளை கிளற செபாஸ்டியன் என பளிச்சிட்டது. ‘செபாஸ்டியன்’ என சற்று அவநம்பிக்கையுடன் பிச்சை கூப்பிட திரும்பியவன் அடையாளம் கண்டுகொண்டான். உணவகத்தில் இன்னும் கூட்டம் குறையவில்லை. இருவரும் சர்ச்க்கு பின்னாலிருக்கும் மைதானத்துக்கு போய் செபாஸ்டியனிடம் இருந்ததில் ஆளுக்கு கொஞ்சம் குடித்துக் கொண்டார்கள். இருவரும் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். கடைசி பூசை மணி ஒலிக்க அவர்கள் திரும்புகையில் கடையை கழுவத் தொடங்கியிருந்தார்கள்.
இப்போது செபாஸ்டியன் அவனை கட்டிப்பிடித்து அழத்தொடங்கியிருந்தான் முன்னமாதிரி இல்ல மாப்பிள என்பதையே மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருந்தான். அவனது தெருமுக்கில் ஒருமாதிரி கொண்டுவந்து விட்டான் செபாஸ்டியன்.
பிச்சை சப்தமில்லாமல் பூட்டை திறந்தான் லேசான சத்தத்திற்கே சகாயம் விழித்துக்கொள்வான், அப்படி விழித்துக்கொண்டால் முழு ராத்திரியும் அவனோடு உட்கார்ந்திருக்க வேண்டும். ஹாலில் நடுவில் படுத்திருந்தான் சகாயம் இரவு விளக்கை போட்டான் பிச்சை. சகாயம் கண்மூடி படுத்திருக்க வயிறு மாத்திரம் தர்பூசணி பழத்துண்டு போல  திறந்திருந்தது. 



நன்றி -தடம் -டிசம்பர் 2016

Comments