நதி புராணம்
ஊரே திரண்டு
ஆறு நிறைந்து ஒடுவதை
பல ஆண்டுகளுக்குப் பின்
ஆச்சரியத்துடன் பார்க்க
நதி காறி உமிழ்ந்தபடி
ஓடியது..
பகலில்
வேட்டிகள் காய்ந்து 
கொண்டிருக்கும்.
இருட்டிய பின்
சாராயம் கிடைக்கும்.
தூமைத் துணிகளும்
பாலித்தின் சிதறல்களும்
காற்றில் பதைபதைக்கும்.
மண்ணைத் தோண்டினால்
நிரோத்தும்
உடைந்த குப்பிகளும் 
சுரக்கும்.
பித்ருக்களின் பிண்டங்கள்
சாக்கடையில் கரையும்.
வருடத்திற்கொருமுறை
சாமி கணுக்கால்
நனைத்து விட்டுப் போகும்.

இதை வைகை நதி
என்றழைப்பது
எம் நாவழக்கம்.

.
படித்துறை என்ற சொல்லுக்கும்
தண்ணீருக்கும் சம்பந்தமில்லை.
வெங்காயத் தாமரைகளில் 
நீந்துகின்றன எருமைகள்.
காலை நேர 
மலங்கழிப்போரின்
பிறப்புறுப்புகளைப் பார்த்து
விக்கித்துப் போயிருக்கிறது
நடுத்திட்டு லிங்கம்
யோனியில் துளையிட்டு.
பம்புசெட்டின் வழி
தன் மீது பாயும்
தண்ணீரை
காணச் சகியா நதி
எப்பொழுதோ
தற்கொலை செய்து கொண்டது.
இருப்பது
நதியின் சவம்
அல்லது
சவங்களின் நதி.

சாம்ராஜ்

Comments