எங்கள் தாத்தாக்களிடம் பொட்டல் இருந்தது

எங்கள் ஊர் தள்ளாகுளத்தில் ஒரு பொட்டல் இருந்தது. இருக்கிறது..பொட்டல் நல்ல பெரிது. ஒவல் வடிவத்தில் இருக்கும். ஒரு மூலையில் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில். அதற்கு முன் பதினாறு கால் மண்டபம். இந்த மூலையில் தென்னவன் சலூன் [தீவிர தி.மு.க காரர்] அதற்கு எதிரே திமுக, காங்கிரஸ் வாசக சாலை. வலது ஒரத்தில் “கொண்டு தள்ளும்”. அதன் அடுத்து பழைய பாழடைந்த மண்டபம். அதன் அடுத்து ஜமிந்தார் பங்களா. இந்த மூலையில் மேரியம்மா விறகு கடையும் அதற்கு அடுத்து இராத்திரி பகலும் விடாது வெல்டிங் அடிக்கும் அக்ரோ ஒர்க்‌ஷாப்பும், இடது பக்கம் வயதான மூதாட்டியை போல ஒரு புளிய மரமும், இரண்டாம் போர் காலத்தில் தீ விபத்து எற்பட்டால் அதை அணைப்பதற்கு தண்ணீரைச் சேர்த்து ஒரு பெரிய தொட்டி இருந்தது. என்னவென்று அடையாளம் சொல்ல முடியாத தூண் ஒன்று..

பொட்டல் நிகழ்வுகளால் நிரம்பியது. தலைவர்கள் உரையாற்றுவார்கள். ஒரு வாரம் இறங்காமல் சைக்கிள் ஓட்டும் வித்தைக்காரர்கள் வருவார்கள். வட நாட்டிலிருந்து Indianphotos என்று தற்காலிக ஸ்டுடியோகாரர்கள் மாசக்கணக்கில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா கட் அவுட்களோடு 
காத்தி ருப்பார்கள். சிறிய சர்க்கஸ்காரர்களின் உள்ளே இல்லாத 
சிங்கங்கள் சப்தங்களில் மாத்திரம் உலாவும்.. நடு மத்தியில் ஒரு பெரிய லைட் கம்பமும் அதைச் சுற்றி இரவுகளில் கறுத்த வண்டுகளும் அலையும். பதினாறு கால் மண்டபத்தில் பிச்சைக்காரர்களும் வீடற்றவர்களும் இருப்பார்கள்.   {அன்றைக்கு தல்லாகுளத்தில்  எல்லோரின் வாயிலும், வாழ்விலும் பொட்டல் இருந்தது.) சாயங்காலங்களில் யாராவது வந்து உட்கார்ந்து இருப்பார்கள். தண்ணீர் தொட்டியின் மீது நெல் காயப் போடப்பட்டிருக்கும். சமயங்களில் சண்டையும் நடக்கும். யாரையாவது காணோம் என்றால் ”பொட்டலில் போய் பார் என்பார்கள்.” உச்சமாக  கள்ளழகர் இரண்டு திருவிழாவிற்காக பொட்டல் வந்து  போவார். பொட்டலைச் சுற்றியிருப்பவர்கள் அதன் புழுதியோடே வாழ்ந்தார்கள். தென்னவன் சலூனில் எப்போதும் காரசார அரசியல் விவாதங்கள் உண்டு. “இது ஆயுதங்கள் புழங்கும் இடம். அரசியல் பேசக் கூடாது” என்று எழுதியிருந்தாலும் உரிமையாளர் மாரியே அதை மீறுவார். டியூப் லைட்களில் பச்சை காகிதம் சுற்றி கடையே பச்சையாக இருக்கும்.
 அதற்கு அடுத்து ஜமீந்தார் பங்களா. எந்த ஜமீன்தார் என்று இன்று வரை எனக்குத் தெரியாது. ராஜா காலத்து தமிழ் சினிமாவுக்கு முன்பே மாட மாடங்களை நான் அங்கேதான் பார்த்தேன். அதற்கு அடுத்து பழைய மண்டபத்தில் ஒரு ஏழை  பிராமன குடும்பம் இருந்தார்கள். நிறைய 
பூனை வளர்பார்கள். அதற்கு நேரே சற்றே தள்ளி ஒரு பெரிய புளிய மரம். நீண்ட ஆயுளைக் கொண்டது. அதன் கீழ் மாடுகளுக்கு லாடம் அடிப்பார்கள். சலிம் பாய் என்ற மூளை குழம்பிய  லாடம் அடிப்பவன் ஒருவன் இருந்தான். அவன் அவரது சொந்த ஊரில் கொலை செய்துவிட்டு 
அதை மறைக்கவே இப்படி பைத்திய வேசம் போடுகிறான் என்றும் சொல்வார்கள். ஒரே தள்ளாக மாட்டை கீழே தள்ளி வீழ்த்துவான்.
 மாடுகள் மிரட்சியோடு அவனை பார்க்க இரக்கம் இல்லாமல் லாடம் அடிப்பான். அதன் நேர் எதிரே மேரியம்மா விறகு கடையும், வீடும். தன் விறகுக் கடையை தாண்டிப் போகும் அத்தனை பேரும் விறகைத் திருடிக் கொண்டு போகிறார்கள் என்று உறுதியாக நம்பும் மேரியம்மா. .அவளுக்கு சட்டையே போடாத  சாத்தானின் உருவத்தை ஒத்த தோற்றத்தில் கணவர் இருப்பார்.. ஆனால் காலில் எப்போதும் பளிச்சென்று ரப்பர் செருப்பு அணிந்திருப்பார். கனவிலும் விறகு திருடுபவர்களை கல்லைக் கொண்டு எறிவாள் மேரியம்மா.பெருமாள் கோவிலிலிருந்து பொட்டல் கொஞ்சம் குறுகி போகும். அங்குதான் திரை கட்டி சினிமா போடுவர்கள். கோவில் ஐயர் வீடுகள் அந்த வரிசையில் தான் இருக்கும்.. சினிமா போடும் போது ஐயர் வீட்டு மாமிகளும் பெண் பிள்ளைகளும்  ஜன்னல் வழியாகவே முழு சினிமாவையும் பார்ப்பார்கள்.பொட்டல் அப்படியே போய் கோவிலுக்குப் பின்புறம் பெரிய பறவைகள் அடைந்த அரச மரத்தின் கிழ்   உட்கார்ந்தபடி தன் சுதந்திர கால  நினைவுகளை அசை போடும் ரங்க நாயுடு மீது இலைகள் உதிர்த்துக் கொண்டிருக்கும் இடத்தில். பொட்டல் முடியும்.

இடப்பக்கம் திரும்பினால் பெருமாள் கோவிவில் ”சொர்க்கவாசல்”. எப்பொழுதும் யாராவது அதன் படிகட்டுகளில் ஆடு புலி ஆட்டம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். “கொண்டுத் தள்ளு’” வில் எப்பொழுதும் சண்டை தான் ,மாட்டின் சொந்தக்காரர்களுக்கும் கொண்டு தள்ளு பாய்க்கும்.{ ஊரில் கேட்பாரற்று திரியும் மாடுகளை யாராவது பிடித்து கொண்டு வந்து இங்கு அடைத்து விடலாம். அதற்கு பணம் கொடுப்பார்கள். பிறகு மாட்டு உரிமையாளர் அபராதத்தை கட்டி அதை மீட்க வேண்டும்}
எங்கள் குடும்பம் சார்ந்து பல விசயங்கள் பொட்டலில் தான்  நடந்தது.. யார் செத்துப் போனாலும் அந்தப் பெரிய புளிய மரத்தின் கீழிருந்தே நீர்மாலை துவங்கும். இழவு வீட்டின் துக்கம் தெரியாமல் நாங்கள் சின்னப் பையன்கள். புளியம்பிஞ்சு பொறுக்கிக் கொண்டு மதிய நேரத்தில் குளிக்கும் சந்தோசத்தில் இருப்போம்.


எங்கள் கூட்டுக் குடும்பத்தின் பெரிய சண்டை இந்தப் பொட்டலிலேயே நடந்தது. மாறி மாறி மண்ணை வாரித் தூற்றிக் கொண்டு வாயெல்லாம் மண்ணாக வீடு திரும்பினார்கள் எங்கள் விட்டு பெரியவர்கள்.. அதன் பின் என் சித்தப்பா  வெளி நாட்டுக்கு போக தயராக  தன்னிடம் சொல்லிவிட்டு திருநீறு பூசிக் கொண்டு தான் போவான் என நம்பிய அம்மாச்சி.  ஊருக்கு போகும் சித்தப்பாவை ஒளிந்திருந்து பார்த்ததும் இதே பொட்டலில் தான்.
கடனிலிருந்து மீள முடியாத ராசு கோனார் எங்கோ ”மருந்தை”  குடித்து விட்டு பொட்டலிலேயே விழுந்து செத்தார்.    


கடைசித் தெரு ராசுவைக் குத்திக் கொன்று விட்டு ஓடிய பிச்சையை இந்தப் பொட்டலில்தான் வைத்து தான் பிடித்தார்கள். சுதந்திரத்துக்கு  முன்பு ஊரடங்கு அறிவித்திருந்த ஒரு நாளில் தன் “வைப்பு” வீட்டிற்கு போய் விட்டு திரும்பாத  என் தாத்தாவிற்காக முழு இராத்திரியும் பொட்டலில் கொண்டு தள்ளு வாசலில் நின்றதை தன் ஆயுளூக்கும் மறக்கவில்லை என் அம்மாச்சி. ஒரு பருவத்தில் பொட்டல் முழுக்க வைக்கோலும் மாட்டு வண்டியுமாக தரையெல்லாம் மஞ்சள் தாவரத்தை விரித்தது போலிருக்கும்..                                                            
நிச்சயாமாய் அன்றைக்கு எல்லோர் வாயிலும் வாழ்விலும் பொட்டல் இருந்தது.
  • எல்லாம் மாறித்தான் போனது. எல்லாவற்றுக்கும் சாட்சியாய் நின்ற அந்த புளியமரத்தை சூரியன் சாட்சியாக ஏரியா கவுன்சிலர்  தன் ஆக்கிரமிப்பின் பொருட்டு வெட்டி வீழ்த்தினார்.
தென்னவன் சலூனின் சந்ததிகள் தொலைந்து போனார்கள். ஜமிந்தார் பங்களா கை மாறி கை மாறி எங்கும் நிற்காமல் ஒரு பகடையை     போல உருண்டு கொண்டிருக்கிறது. பழைய மண்டபம் சர்விஸ் ஸடேசனாக உருமாறியது. அந்த எழை பார்பனர்களும் பூனைகளும் என்ன ஆயினர்.


கொண்டுதள்ளு வி. எ. ஒ அலுவலகமாகி விட்டது. வைக்கோல் வண்டிகள் வருவதேயில்லை. எளிய வித்தைக்காரர்கள் எங்கே போனார்கள்.


அந்தவடகத்தியஇந்தியன்ஸ்டுடியோக்காரர்கள்இப்பொழுதும்இருக்கிறார்களா


லாடம் அடிக்கும் சலிம் தொழில் இல்லாமல் பைத்தியம் முற்றி செத்து போனான்.


பதினாறு கால் மண்டபம் போலிஸ் செக் போஸ்டாக மாறி எப்பொழுதும் பூட்டியே கிடக்கிறது.


இராண்டாம் உலக போர் தண்ணிர் தொட்டி புழுதியில் மூழ்கி காணாமல் போனது.


காரணமற்று நின்று கொண்டிருந்த  தூனும் காணாமல் போனது.


மேரியம்மா விறகு கடையும் சிதைக்கு வைத்த விறகாக சுருங்கிப் போனது.
பொட்டல் எங்கும் ஒர்க் ஷாப் கார்கள்  வேன்களுமாய் நிற்கின்றன.எவரும் பொட்டல் புழுதியில் உட்கார்வதில்லை. உட்கார முடிவதில்லை.

ஜந்தாம் உலக தமிழ் மாநாட்டினை ஒட்டி வைக்கப்பட்ட உ.வே.சா,, திரு.வி. க சிலைகளின் கழுத்துகள் பொட்டலில் சேல் நடத்த வரும் ஷோரும்காரர் பேணர் கட்ட உதவியாக இருக்கின்றன. மற்ற சமயங்களில் ஒன்றுக்கிருக்க உதவுகின்றன.


ஒரு இரவு முழுக்க என் தாத்தாவிற்காக பொட்டலில் காத்திருந்த என் அம்மாச்சியை இதே பொட்டலின் வழி பாடையில் சுமந்து சென்றோம்.
தலைவர்கள் பேசிய பொட்டலின் ஒரங்கள் கோவில் செருப்பு ஸ்டாண்டுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.


பிரசன்ன வெங்கடாஜலபதி பெப்சி உபயத்தில் பிரகாசிக்கிறார். எல்லாவற்றையும் கண்காணிக்கிறது செல்போன் கோபுரங்கள். பெரிய  பொட்டலாக இருந்தாலும் போகவும் வரவுமான பாதையாக மட்டுமே இன்று இருக்கிறது..


ரங்கநாயுடுவும் இன்று இல்லை.அவர் மேலே சதா இலை உதிர்த்த அரச மரத்து பறவைகளின் சந்ததிகள் என்னை போல் நினைக்க கூடும்.

Comments