சிறுத்தைகள் உலவிய சென்னை

1879 - சென்னையை பற்றிய குறிப்பு - 
 அது நகரமில்லை ஜந்தாறு கிராமங்களின் சேர்க்கை

1900 - சென்னையை பற்றி ஒரு ஆங்கிலேய அதிகாரியின் வர்ணனை - 
பழைய பட்டுகளாலும் ஜரிகையாலும் அலங்கரிக்கப்பட்ட சொகுசான வயதான பெண்மணியை போல முற்காலத்தில் பணத்தையும் பரபரப்பையும் அனுபவித்திருந்தாலும் உடல் வாகிலோ செல்வத்திலோ சீரழியவில்லை.


1930 - தியாசபிகல் சொசைட்டியின் செய்தி குறிப்பு - 
அன்னிப்பெசன்ட் அம்மையார் தனது நெல்லூர் பயணத்தை அடையார் ஆற்றின் வழி படகிலேயே மேற்கொள்வார்.

1950 - அல்போன்ஸ் ராய் சர்வதேச வனவிலங்கு ஒளிப்பதிவாளர் -  
 கிண்டியில் சிறுத்தைகள் இரவில் சாலைகளைக் கடக்கும்.

1950 - பள்ளிகரனையிலிருந்து சிதம்பரம் பிச்சாவரம் நீர் நிலைவரை நீர் வழியாகவே பயனப்படலாம்-பொதுபணித்துறை செய்தி குறிப்பு.

1955- அசோகமித்திரன் ஒரு நகரம் ஒரு பார்வை புத்தகத்தில்- அப்பொழுதெல்லாம் சைதாப்பேட்டைக்குப் பிறகு பேருந்தில் போக முடியாது. அடையாறு ஆற்றை படகில் கடந்துதான் திருவான்மியூர் வேளச்சேரிக்குப் போக முடியும்.

1960 - கோமல் சுவாமிநாதனின் பறந்து போன பக்கங்களில் - 
மாம்பலம் தாண்டி கொஞ்ச தூரம் போய் விட்டால் அப்புறம் ஒன்றும் கிடையாது வெறும் காடுதான்.

1965 - நடிகர் கமல்ஹாசன் மலையாளப் பத்திரிகை கிரஹலட்சுமியின் நேர்காணலில் -    சிறு வயதில் இரவில் வீட்டிலிருந்து(ஆழ்வார்ப் பேட்டை) எங்களை வெளியே போக அனுமதிக்க மாட்டார்கள். சாலைகளில் பாம்புகள் அலையும்.

1970 – எஸ்.முத்தையா,சென்னை மறுகண்டுபிடிப்பு என்ற நூலில் இருந்து –
சாந்தோமில் இருந்து தெற்கே சென்றால் 1840ல் கட்டப்பட்டு இப்பொழுது புறக்கணிக்கப்பட்ட எல்ஃபின்ஸ்டன் பாலத்தை அடையலாம். அதை கடந்தால் அடையாறு முகத்துவாரத்தை அடையலாம். அங்கே எஞ்சியிருக்கும் சதுப்பு நிலக் காடுகளை கானலாம். பறவைகளை நேசிப்பவர்களுக்கு இது இன்னமும் ஆர்வமூட்டும் இடமாக இருக்கிறது. ஆறு, சதுப்பு நிலம், காடு, உப்பங்கழி, சிறு தீவுகள், கடல், திறந்த வெளி ஆகியவை இருக்கும் இந்த பகுதியில் நீர் நாரைகள் உட்பட 150 விதமான பறவைகள் [ஃப்ளெமிங்கோ உள்பட] உள்ளதாக பதிவாகி உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து அநேகமாக ஆசியாவின் வடகோடியிலிருந்து 70 வகைப் பறவைகள் இங்கு வருகின்றன. கோடைகாலத்தில் இங்கு பறவைகள் கூடு கட்டுகின்றன. முகத்துவாரத்தை சரணாலயம் ஆக மாற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்கள் முயற்சி செய்யாததால் பாதுக்காக்கபட்ட காடு என்ற தகுதியை பெற முடியாமல் போனது. அதில் வசிக்கும் குள்ள நரிகள், நரிகள், காட்டு பூனைகள், உடும்புகள், பாம்புகள், பறவைகள் போன்றவற்றுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாது போனது.

1990 - ல் இருந்து வேகமாக நடந்து வளர்ச்சி திட்டங்களினால் முகத்துவாரத்தில் இருக்கும்விலங்கினங்களும் தாவர இனங்களும் அழிந்து கொண்டிருக்கின்றன.

1821முதல் ஆளுநரின் மன அமைதிக்காக ஒதுக்கப்பட்ட 11,300 ஏக்கர் கிண்டி காடு, 1910ல் வனத்துறையின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதே ஆண்டு ,பாதுகாக்கப்பட்ட காடாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1948ல் ஆளுநர் மாளிகை ராஜ் பவனாக மாறியபின், முதல் இந்திய ஆளுநர், மகாராஜா கிருஷ்ண குமார் சிங் பாவ்சிங்கி 1000 ஏக்கரை அரசாங்கத்துக்கு அளித்தார். பிரதமர் நேருவின் விருப்பத்தின் பேரில் காட்டின் மூலையில் ஒரு சிறுவர் பூங்கா உண்டாக்கப்பட்ட பின் அந்த இடம் அதிகாரபூர்வமாக 1958ல் வனத்துறையிடம் அளிக்கப்பட்டது. 1954லிருந்து 1977வரை அந்தப் பாதுகாக்கப்பட்ட காடு வெவ்வேறு நினைவகங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பிரித்துக்கொடுக்கபட்ட பின் அதன் அளவு 680 ஏக்கராக குறைந்து 1978ல் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டது.

2010 - சிங்காரச் சென்னை -
நள்ளிரவில் தோழி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் பெளர்ணமி
நிலவை ரசித்தீர்களா?.
நான் பதிலுக்கு “நகரத்தில் நிலவு உண்டா என்ன?” என கேட்டேன்.

நகரத்தில் எப்போது நாம் நிலவு பார்த்தோம். சூரியோதயம் உண்டா நம் வாழ்வில். ஒரு வேளை நிலவு தெரிந்தால் கூட அது டீசல்,பெட்ரோல் புகை படிந்த நிலாதானே. நகரம் எனும் பொழுது நமக்குப் படியும் சித்திரம் வெறும் காங்கிரீட் வனமே. ஆனால் இந்த நகரத்திலும் காடுகள் இருந்தன. மலைகள் இருந்தன. ஆறுகள் இருந்தன. பறவைகளும் இருந்தன.

சென்னைக்கு தெற்கே செங்கல்பட்டு தொடங்கி வண்டலூர் வழி பரங்கிமலை வரை மலைகள் தான். காடுகளும் உண்டு. அந்த கானகத்தின் ஒரு பகுதிதான் வண்டலூர் உயிரியல் பூங்காவாகியிருக்கிறது. சென்னை கிறித்தவக் கல்லூரி இன்றைக்கும் அடர்ந்த கானகமே.அப்படியே வடகிழக்கில் நகர்ந்தோமானால் பள்ளிக்கரனை சதுப்புநிலக் காடு, அதனை அடுத்து ஆளுநர் மாளிகை ஆக்கிரமித்து வைத்திருக்கும் காடு, ஐஐடி யின் காடு. அதனை அடுத்து தியாசபிகல் சொசைட்டியின் காடு, அடையாறு ஆறு பின்பு கடல் இன்றைக்கும் அடையாரின் ஒரு பகுதிக்குப் பெயர் கானகமே.

நான் சொல்லும் சித்திரத்தை நீங்கள் மத்திய கைலாஷ் சிக்னலில் நின்று நீங்கள் தீட்டக்கூடாது. இது சற்றே பழைய சித்திரம். ஆனால் மிகப் பழைய சித்திரம் அல்ல. ஒரு 60 ஆண்டு கால பழைய சித்திரமே. அதிகபட்சம் நம் அப்பாவின் வயது. அல்லது நம் வீட்டு பரணில் கிடக்கும் பித்தளை அண்டாவின் வயது.

செங்கல்பட்டிலிருந்து பரங்கிமலை வரையிலான மலைகளிலிருந்து வழிந்து வரும் மழை நீர் தங்குமிடமாக பள்ளிக்கரனை சதுப்பு நிலக்காடு இருந்தது. ஏறக்குறைய 6000 ஹெக்டேர் பரப்பளவு. இதிலிருந்து ஒக்கியம் மடுவு வழியாக தண்ணீர் கடலுக்குப் போய்ச் சேர்ந்தது. இந்தப் பள்ளிக்கரனை சதுப்பு நிலம்தான் வேளச்சேரி, அடையாறு, கிண்டி, தரமணி, திருவான்மியூர் வரையிலான பகுதிக்கு நிலத்தடி நீருக்கான அடிப்படை ஆதாரம். காலகாலமாக கண்டங்கள் பல கடந்து பல்வேறு பறவையினங்கள் இங்கு வருகின்றன(சைபீரியப் பறவைகள் உட்பட). ஆறு மாதம் வரை தங்கியிருந்து குஞ்சு பொரிக்கின்றன. உயிரியல் ஆய்வாளர்கள் இந்தப் பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தை அரிய வகை உயிரினங்கள் வாழும் பகுதியாக அறிவித்திருக்கின்றனர். இருளர்கள், வேடர்கள், குறவர்களின் வாழ்வாதாரம் இந்த சதுப்புநிலம்.இப்போது அவர்கள் விரட்டப்பட்டு குப்பைகள் கொட்டப்படுகின்றன. 
சென்னையின் முள்ளிவாய்க்கால் (மனிதரின் உயிரும் மரங்களின் உயிரும் பறவைகளின் உயிரும் இயற்கைக்கு ஒன்றென்றக் கணக்கில்)

”நகரமயமாக்கலில்” பள்ளிக்கரனையின் 6000 ஹெக்டேர் வெறும் ஆயிரம் ஹெக்டேராக சுருங்கியது. பள்ளிக்கரனை எங்கிருக்கிறது என்று தெரியாதவர்களுக்கு இது வேளச்சேரியிலிருந்து தாம்பரம் போகும் சாலையில் இருக்கிறது. (இந்த சாலையே அந்த சதுப்புநிலத்தின் மீது போடப்பட்டதுதான்.) இன்னும் துல்லியமாக நாட்டின் பெருமைமிகு ”கணிப்பொறி நிறுவனங்கள்” பெரும்பாலும் இந்த சதுப்புநிலத்தில் கட்டப்பட்டவையே.. இந்த வளாகங்களில்தான் சரி சமூக நீதி இல்லையென்றால் அதன் அஸ்திவாரங்களும் அநீதியில் தான் நிற்கிறது.

ஆறாயிரம் ஹெக்டேர் பரப்பு நாளொன்றுக்கு 2300 டன் குப்பைகள் கொட்டப்பட்டு ரியல் எஸ்டேட்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பிரமாண்ட கணிப்பொறி நிறுவனங்கள் எழுப்பப்பட்டு அரசால் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை தொடங்கப்பட்டு ( கழிவு நீர் சுதிகரிப்பு ஆலைக்கு அரசு எப்படி இந்த இடங்களை தேர்வு செய்கிறது) ஆயிரம் ஹெக்டேராக ஆனது.

கண்டம் விட்டு கண்டம் நம்பிக்கையோடு பறந்துவரும் பறவையினங்கள் இந்த குப்பை மலைகளைக் கண்டு திகைக்கின்றன. இவற்றில் எப்படி தன் சந்ததிகளைப் பெருக்க என புலம்புகின்றன. கடும் வெம்மையில் துளி நிழல் இல்லாமல் கழிவுநீரில் தெரியும் பிரம்மாண்ட வளாகங்களின் பிம்பங்கள் அவைகளை விரட்டியடிக்கின்றன. அன்றாடம் இங்கே ஆயிரக்கணக்கான டன் குப்பைகள் எரிக்கப்பட்டு அதனருகே இருக்கும் மக்களுக்கு வினோத நோய்களும் காயங்களும் ஏற்படுகின்றன.

பள்ளிக்கரனையை முற்றிலும் அழிப்பதற்கான வேலைகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. அரசு தனது கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை விரிவுபடுத்த திட்டமிடுகிறது. அப்படி நடந்தால் மீதமிருக்கும் ஆயிரம் ஹெக்டேரும் இல்லாமல் போகும்.

இதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்பு(public hearing) போன மாதம் வேளச்சேரியில் நிகழ்ந்தது. முழுக்க முழுக்க ஆளுங்கட்சி ரியல் எஸ்டேட்காரர்களால்அரங்கம் நிரம்பியிருக்க இந்தத் திட்டத்தை எதிர்க்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்,சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கலந்து கொள்ள கருத்துக் கேட்பு ”தீர்மானித்தபடி” நிகழ்ந்தது.

இது போன்ற மக்கள் வாழ்வியல் சார்ந்த போராட்டங்களில் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் முகம் கொடுப்பதில்லை.(பல சமயங்களில் அவர்கள்தான் அதனால் ஆதாயம் அடைபவர்கள்.) இடதுசாரிகளைப்பற்றி சொல்லவே வேண்டியதில்லை ஒரு வேளை ரஷ்யப்பறவைகள் அங்கு வருவதாய் அவர்களுக்கு தெரிந்திருந்தால் ஆதரித்திருப்பார்களோ என்னவோ (தோழர்காள் சைபீரியா ரஷ்யாவில்தான் இருக்கிறது). தமிழ் தேசியர்களுக்கு பள்ளிக்கரனைக்கான பேருந்து எண்ணே தெரியாது.

சுற்றுச்சூழல் சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனக்காரர்களுக்கு கோர்வையாக தமிழ் பேச வராது. அவர்களின் உடையும் பாவணைகளும் வேறு விதமாக இருக்கும் .வேற்று கிரக வாசிகள் போல் இருப்பார்கள்.இது போன்ற கருத்து கேட்பில் அவர்களுக்கும் அரசியல் கட்சிக்காரர்களுக்கும் நடக்கும் உரையாடல் சுவாரஸ்யமானது. கட்சிக்காரர்கள் “தலைவர் அவர்களே இவர்களே” என விளித்து கோட்டைவரை நன்றி சொல்லிக் கொண்டிருக்க,, இவர்கள் “according to uruguae summit” என்று தொடங்க மொத்த கூட்டமும் இவர்களை பேதமையாக பார்க்கும்.கூட்டத்திற்கு நடுவே இடையிடையே இவர்கள் தனியாக கூட்டம் நடத்துவார்கள்.சமயங்களில் அவர்களுக்குள்ளேயே பெரும் சண்டை நடக்கும். நீக்கமற எல்லோரும் ஜோல்னா பை சகிதம் பெரும் பெரும் வளையங்களை காதிலும் கையிலும் மாட்டிக் கொண்டு ஆங்கில துண்டு பிரசுரங்களோடு அலைவார்கள். கைபேசி சினுங்க ரகசிய குரலில் “ya I”ll there for dinner” என்பார்கள் ஆளுங்கட்சிக்காரர்களின் Honda city கார் உறுமல்களில் இவர்களின் புள்ளி விபரங்கள் கரைந்து போக, இவர்கள் எட்டு பேர் கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என Honda city யைவிட பெரிய கார்களில் புறப்படுவார்கள். ஆனாலும் அவர்கள்தான் போராடுகிறார்கள்.


பள்ளிக்கரனை சதுப்பு நிலப்பகுதி விரைவில் அழிந்து போகும். ஒரு 60, 70 வருட காலத்தில் நாம் ஒரு யுக சேகரிப்பையே இழந்துவிட்டோம். இவ்வளவு இழந்து என்ன பெற்றோம் என்று கேட்டால் சொல்லிக் கொள்வதற்கு ஒன்றும் இல்லை. கான்கிரீட் காட்டையும், ஜோதிகா சூர்யா காதல் ஜீப் பயணிக்கும் கிழக்கு கடற்கரை சாலைகளையும், தங்க நாற்கார சாலைகளையும், கடலோர விடுதிகளையும் கள்ளத்தனத்தை வளர்க்கும் கைபேசியையும் சொல்லலாம். பறவைகளையும் பல்வேறு உயிரிகளையும் மனிதர்களையும் பலி கொடுத்துத்தானா இவையெல்லாம்?.

ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் birds படத்தில் பறவைகள் கூட்டம் கூட்டமாக மனிதர்களை தாக்க தொடங்கும். உலகத்தின் இறுதி நாளைப் பற்றி மதங்களும் அப்படித்தான் சொல்கின்றன...

இந்த ஒன்றிற்காகவது நான் மதங்களை நம்ப விரும்புகிறேன்.

                                                                                                              
  

Comments