உறங்கா நகரம் (முன்னொரு காலத்தில்)

எங்கள் ஊரில் இரவு எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் என்னவேண்டுமானாலும் சாப்பிட கிடைக்கும் என்று ஒரு பின்னிரவில் அமைச்சர் கா.காளிமுத்து முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் சொல்ல எம்.ஜி.ஆர் சவாலாக பிரியாணி கிடைக்குமா என கேட்க, அதிகாலை 4 மணிக்கு பிரியாணி தருவித்துக் கொடுத்தார் அமைச்சர். - செவிவழிச் செய்தி

மாலை தெற்காவணி மூலவீதி செட்டியார் வீட்டில் சுப்புராஜ பாகவதர், கந்தசாமி பாகவதர், துரைச்சாமி பிள்ளை இவர்களுடன் சங்கீதக் கச்சேரி கேட்டேன். ஆர்மேனியம் கோவில்பட்டி சாமி பாகவதர் இரவு 11 மணிக்கு தன் தங்கச் சங்கிலியை வாங்கிப் போனார். இரவு 11.30க்கு மேற்படி பாகவதர்களுடன் பாடியபடியே ஜட்காவில் நகரைச் சுற்றி வந்தோம்.  - மதுரகவிபாஸ்கரதாஸின் நாட்குறிப்புகளிலிருந்து’ (23-12-1925)

உறங்கா நகரம் (முன்னொரு காலத்தில்)


தமிழ்நாட்டின் மற்ற ஊர்களின் இரவுகளும் மதுரையின் இரவும் வேறுபட்டவை. மற்ற ஊர்கள் இரவில் உறங்கும். மதுரை கண்ணதாசன் வரியில் சொன்னால் ”’இரவு விடியும்”.தமிழ் சினிமா தற்பொழுது மதுரையை பற்றி தரும் மிகையான சித்திரங்களை விலக்கி பார்த்தால் மதுரைக்கென்று பிரத்யோக தன்மையுண்டு. சாப்பாட்டு பிரியர்கள், பேசுவதில் விருப்பமுடையவர்கள் நிறைய டீ குடிப்பவர்கள் {எல்லா காபி, டீ நிறுவனங்களும் மதுரையையே தனது முதன்மையான ஆய்வு பிரதேசமாக கருதுகிறார்கள்}. மதுரை போல் வேறு எங்கும் இவ்வளவு அடுத்தடுத்து டீக்கடைகளை பார்க்க முடியாது. {எந்த டீக்கடைக்காரரும் நஷ்டப்பட்டதாய் நான் கேள்விபட்டதில்லை} ஒரு  பதினைந்து வருடத்திற்கு முன்னால் இந்த கடைகள் பெரும்பாலும் இரவிலும் திறந்திருக்கும்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாய் இருந்தது அந்த இரவுகள். போஜன பிரியர்களுக்கு நள்ளிரவு இட்லியாய் அது இருந்தது. குட்டி முதலாளிகளுக்கு அந்த இரவு நண்பர்களின் சந்திப்பாக இருந்தது. இடதுசாரிகளுக்கு அது தோழர்களை சந்திக்கும் பொழுதாக ஆரம்பித்தது. குடிகாரர்களுக்கு அது சாலைகளை அளப்பதாக இருந்தது. பட்டிமன்றங்கள் பின்னிரவு வரை நீடித்தன. “சுந்தர்-ஜெகன் கச்சேரியின் பெண்பாடகிக்காக இளைஞர்கள் பனியில் காத்திருந்தனர். பாண்டியன், வெள்ளை ரோஜா இசை கச்சேரிகள் நள்ளிரவு வரை தொடர்ந்தன. தி.மு.கவின் நாகரீகப் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் பதினொரு மணிக்கு தன் பேச்சை தொடங்குவார். முளைப்பாரி ஊர்வலங்கள் நள்ளிரவு இரண்டு மணிக்கே வைகை ஆற்றை அடையும். டூரிங் தியேட்டர்களில் 11.30க்கே படங்கள் தொடங்கும். “இரவு பறவைகள் {ராத்திரியில் மாத்திரம் சுற்றி திரிபவர்களை இப்படி அழைப்பதுண்டு} கடைசி பேருந்து பிடித்து நகருக்குள் வந்து இரவெல்லாம் சுற்றி காலை புதுபாலில் டீக்குடித்து முதல் பேருந்தை பிடித்து வீடு திரும்பி அம்மா, அப்பா வசவுகளோடு போர்வைக்குள் நுழைவார்கள். தல்லாகுளம் பாக்கியம் கடை அடைக்கும் பொழுது வீடுகளில் வாசல் தெளிக்க ஆரம்பித்திருப்பார்கள். கந்தசாமி இட்லிகடை தோசைகல் போஸ்ட்மார்ட்டம் முடிந்து திரும்பும் எஸ் ஐ.க்காக காலை 4 மணிக்கு காத்திருக்கும். யானைக்கல்லில் மாடுகள் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் இரவெல்லாம் அலைந்து கொண்டிருக்கும்.  சர்க்கஸ் கூடாரத்தின் விளக்கு வெளிச்சம் போல அன்றைக்கு எல்லோர் வாழ்விலும் இரவு இருந்தது.

மதுரையின் இரவு வாழ்க்கையின் அந்திம பொழுதுகளில் அலைந்தவன் நான். 90களில் இரவுகளை எங்கள் கால்கள் வழியாக அளந்தோம். இரண்டாவது ஆட்டம் சினிமா. பின்பு தியேட்டர் வாசலில் இருக்கும் டீக்கடையில் நின்று பட்டர்பன், மசாலா பால் சகிதம் விடிய விடிய பேச்சு. அல்லது எவர் வீட்டு முக்கிலாவது நின்று பேசத் தொடங்கினால் கிளம்பும் பொழுது கோயிலில் பாடல் போட தொடங்கியிருப்பார்கள். நள்ளிரவில் நண்பர்களை சந்திப்பது தற்செயல் நிகழ்வு அன்றைக்கு. இரண்டாம் ஆட்டம் முடிந்து, பட்டிமன்றம் கேட்டு, அதன்பின் நையாண்டி மேளம் பார்த்து பிரிவோம். நண்பர்கள் இரவெல்லாம் பேசிகொண்டிருந்து அதிகாலை அப்படியே ஷேவ்செய்து கொண்டு பாண்டியனில் வரும் நண்பர்களை வரவேற்கவோ, வைகைக்கு வழியனுப்பவோ போவார்கள். பேசி, பேசி அந்த இரவுகளை விடிய வைத்தோம். எங்கள் பிரதிநிதியாக சாமி கள்ளழகரே இரவில் தான் வருவார் மதுரைக்குள்.

அநாதிகாலம் தொட்டு மதுரை உறங்கியிருக்காது என்றே நம்புகிறேன். பழைய யாத்திரியர்களின் குறிப்புகள் மதுரையில் இரவு முழுக்க நடக்கும் வானிபம் பற்றி சொல்கின்றன.  வெள்ளையர் ஆட்சியில் கூட மதுரை உறங்கவில்லை. மதுரகவி பாஸ்கர தாஸ் நாட்குறிப்புகள் வாசித்து பாருங்கள். எனக்கு அழுகை வருகிறது அதை படிக்கும் பொழுது . ஜெகஜோதியாய் இருந்திருக்கிறது அன்றைய இரவு வாழ்க்கை.  ரசிய இலக்கியங்களில் காண்கின்ற பின்னிரவு வாழ்வு, நாடகம் பார்த்து அதிகாலை கோச் வண்டிகளில் புறப்படுவார்களே கோமகன்கள் அந்த சாத்தியம் இங்கே சாதரனருக்கும் இருந்தது வெள்ளையர் ஆட்சியில்.

எல்லாம் முடிந்தது நண்பர்களே, தொன்னூற்றி இரண்டாம் ஆண்டு வாக்கில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையென்றார்கள். நகரத்தை அமைதிபடுத்துகிறோம் என்றார்கள். குற்றவாளிகள் தப்புகிறார்கள் என்றார்கள். {முட்டை புரோட்டாவை கொத்துகின்ற சப்தத்தில் பல குற்றங்கள் நிகழ்கின்றன என அதை தடை செய்யும் அபத்தம் எற்கனவே அரங்கேறியிருந்தது} மக்கள் நடமாடுவதால் குற்றங்கள் கூடுவதாக சொன்னார்கள்.  

மூணு மணிக்கு இட்லி சாப்பிட போகிறேன் என்பவனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார் மதுரையில் பொறுப்பேற்ற வடக்கத்திய உயர்காவலதிகாரி.  தங்க பதக்கம் திரைப்படத்தின் எஸ் பி செளத்ரியின் வசனத்தில் சொன்னால் “அந்த ராத்திரி நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் இருப்போம்” என்றார்கள். எல்லாம் அடைக்கப்பட்டன, நிறுத்தப்பட்டன. டீக்கடைகள் பனிரெண்டு மணிக்கு மேல் சாராய கடைகளை போல் இயங்கின. ஒரு மணிக்கு விளக்கணைத்து இருட்டில் இட்லி சாப்பிட வேண்டிய கட்டாயம்.  போலிஸ் வேனின் சக்கரத்தின் கீழ் ஒரு கலாச்சாரம் நசுங்கியது.  யுகம் யுகமாய் தூங்காத மதுரை வலுக்கட்டாயமாக அடித்து ”உறங்க” வைக்கப்பட்டது.

சமகாலத்து இரவு நேரத்து மதுரை வீதிகள் என்னை அழ வைக்கின்றன. எவ்வளவோ பார்த்த புது மண்டபத்து யாளிகளும் என்னோடு சேர்ந்து கண்ணீர் விடுகின்றன. புது மண்டபத்தின் வாசலில் இருந்த புராதன குழியை மூடி மார்பிள் பதித்து விட்டார்கள். பதினோரு மணிக்கு மேல் அங்கு “வேறொரு” வியாபாரம் களைகட்டும்.  கீழ்பாலமும் போனது. அதன் எளிய இரவு வியாபாரங்களும் காணாமல் போயின.  “இரவு பறவைகள்” எங்கே போயினர்?  “பீம புஸ்டி அல்வாக்காரரை எவரேனும் பார்த்தீரா? கரகாட்டகாரனின் கரகம் எந்த பரணில் உறங்குகிறது? சாமி கள்ளழகரையே நேரத்தோடு வரச் சொல்கிறது “நிர்வாகம்”.

இன்றைய மதுரை இரவு வீதிகள் மனநிலை பிறழ்ந்தவர்களுக்கும், மாடுகளுக்கும், கோவேறு கழுதைகளுக்கும், கண் சிமிட்டும் ஏ டி எம் களுக்கும், அதன் வாசலில் உட்கார்ந்து விடாமல் குச்சியால் தட்டும் செக்யூரிடிகளுக்கும், போலிஸ் வேனுக்குமானதாய் போனது.

பின்னிரவில் என்னை கடந்து போகும் மனநிலை பிறழ்ந்தவன் கோபமாய் ஆமானுட மொழியில் பிதற்றிக் கொண்டே போகிறான். இந்த புராதன நகரம் இப்படி உறங்குகிறதே என்பதற்கான சபித்தலாகவும் இருக்க கூடும் அது. 
  
                                                                                                  

Comments