துப்பாக்கிக் குழலிருந்தே ⇑அதிகாரம் பிறக்கிறது
துப்பாக்கிக் குழலிருந்தே ⇑அதிகாரம் பிறக்கிறது
தமிழ்ச் சூழலில் எப்பொழுதும்
ஒரு துர்பாக்கியம் உண்டு. நாம் நேசிக்கும் கலைஞர்கள், படைப்பாளிகள் பலர்
எப்பொழுதும் எதிர்ப்புறத்தில் நிற்பதுண்டு. ஆனால் கலையால் அவர்கள் நம்மை
அக்கரையில் நின்று வசீகரித்துக்கொண்டே இருப்பார்கள். அந்தப் பக்கம் நம்மை
வரச்சொல்லி படகு வேறு அனுப்புவார்கள். இணைந்து பாலம் கட்டுவோம் என்பார்கள்.
நெஞ்சுரம் இருந்தால் நீந்திக்கூட வரலாம் என்பார்கள். அக்கரையில் களிப்பாட்டங்கள்
உண்டு. விடிய விடிய கூத்துக்கள் உண்டு. பாணன் உண்டு. பாடினி உண்டு.
இக்கரையில் கல்லில் அடுப்பு
மூட்டி பசை காய்ச்சி மீதமுள்ள மாவை தோசை சுடும் சூழல்தான். மதுரைப் பக்க
முளைப்பாரி கும்மி போல
“மூணு முள்ளெடுத்து
மூணு குளம் வெட்டினேன்
ரெண்டுல தண்ணியே இல்ல
ஒண்ணுல ஊத்தே வரல”
என்ற பிலாக்கணம்தான்
எப்பொழுதும். இந்த நீண்ட நெடிய இக்கரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள்
அமர்ந்திருக்கிறார்கள். நீண்ட காலமாக அமர்ந்திருக்கிறார்களே என விசாரிக்கப் போனால்
அவர்கள் சிலையாய் சமைந்து பல்லூழி காலமாயிற்று. ஆனால் அவர்களின் கண்கள் மாத்திரம்
எதிர்த் திசையைப் பார்த்தவண்ணம்.
எதிர்க்கரையில்
கொண்டாட்டங்கள் இக்கரையில் காதுகிழிக்கும்போது நாம் அடிவயிற்றிலிருந்து ‘உன்னை
எனக்கு ரொம்பப் பிடிக்கும் பன்னீர் ஷெல்வம். நீ என்கூட இருக்க வேண்டியவன். ஆனால் யூனிஃபார்ம் போட்டு எதிர்த்த பக்கம்
நிற்கிறே’ என ’சத்ரியன்’ பட திலகனாய் கத்தவேண்டி
இருக்கிறது. இதற்குப் பகரமாக அடித்துக் கிழிக்கப்பட்ட முரசொன்று அக்கரையிலிருந்து
நம் பக்கம் வீசப்படுகிறது. கிழிந்த முரசுகளுக்கென்றே நம்மிடம் எத்தனை பாடல்கள்
உள்ளன! தாடியை நீவிக்கொண்டே பாடத் துவங்குகிறோம்.
என்செய்வது? காலத்திற்கும் நம் துயரம் இது. நம் ஊழ்வினை. நாம் வாங்கிவந்த
வரம் அப்படி. நான் இக்கரையில் நின்றே ‘கண்டி வீரனை’ வாசிக்கிறேன்.
தமிழில் நேரடியாக அரசியல்
கதை எழுதுபவர்கள் குறைவு. அப்படி எழுதுபவர்களில் தங்கள் அரசியலை தெளிவாக
முன்வைப்பவர்களும் அந்த அரசியலை நம்மை நோக்கிக் கடத்துபவர்களும் மிகக்குறைவு.
நம்மை நோக்கி அரசியலை கடத்துகிறோம் கடத்துகிறோம் என்று சொல்லிச் சொல்லி ரொம்ப
காலத்தை கடத்திவிட்டார்கள். சமயத்தில் நம்மையே.
Lost in translation தான் இன்றைய சூழலுக்கு மிகப்
பொருத்தமான கேப்ஷன் அல்லது டேக்லைன். இன்னும் ஆழமாக யோசித்தால் மார்க்சியமே இங்கு
மொழிபெயர்ப்புதானே. இந்த மொழிபெயர்ப்பில் மார்க்சின் தாடி, மீசை எல்லாம் சரியாக
வந்துவிட்டது. கோட் சூட் கூட வந்துவிட்ட்து. மார்க்ஸ்தான் இன்னும் வந்து
சேரவில்லை.
யுத்தம் நிகழ்ந்த நாட்டைப்
பற்றி, யுத்தத்தைப் பற்றி அதன் பின்விளைவுகளைப் பற்றி புலம்பெயர் வாழ்வு பற்றி
எழுதுவது அத்தனை சுலபமில்லை.
இக்கரையில் நின்று எந்தத்
தயக்கமுமின்றி சொல்கிறேன். ஷோபா மேலே
சொன்ன அத்தனையையும் கலையாக நேர்த்தியாக அத்தனை துல்லியமாக தன் படைப்பின்வழி
முன்வைக்கிறார்.
கருப்புப் பிரதிகளால் மிக
வசீகரிகமாக வடிவமைக்கப்பட்ட, பத்து கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் கலைஞர்
கருணாநிதிக்கான சமர்ப்பணத்திலேயே பகடி தொடங்கிவிடுகிறது. இந்த சமர்ப்பணத்துக்கு
அடுத்தப் பக்கத்தில் உள்ள தம்மபதத்தின் வரிகள்.
“வெற்றி வீரன் பகைமையை
வளர்க்கிறான்
தோல்வியுற்றவன் நோவுடன்
கிடக்கிறான்
வெற்றியையும் தோல்வியையும்
விரும்பாத
சாந்தமுடையவன் போதையோடு
வாழ்கிறான்”
இரண்டையும் ஒருங்கே இணைத்து
வாசித்தால் பகடி நமக்கு விளங்கும்.
‘ரூபம்’ முதல் கதை. சிறுவயதிலிருந்து
தொலைக்காட்சியை பெருவிருப்பத்தோடு பார்ப்பவன் பின்பு எல்.டி.டி.ஈ.யில் இணைந்து
போரிட்டு ஒரு கால் இழந்து புகழ்பெற்ற தொலைக்காட்சி அறிவிப்பாளனாய் ஐரோப்பா
சென்றுவந்து, நந்திக்கடல் வரை சண்டையிட்டு, பின்பு கைது செய்யப்பட்டு, சித்தரவதை
செய்யப்பட்டு பின்பு விடுதலை செய்யப்படுகிறான். அவனால் சிறுவயதிலிருந்து
ரூபங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது. சிறுவயதிலிருந்து தொலைக்காட்சியை அத்தனை
வெறியோடு பார்க்கிறான். பின்பு தொலைக்காட்சியில் மற்றவர்கள் அவனைப்
பார்க்கின்றனர். இறுதியாக கதவுகளும் நிலைகளும் பெயர்க்கப்பட்ட தன் வீட்டில் சிறிய
தீப்பெட்டியை நடு இரவில் அணங்காது பார்ப்பவனாய் முடிகிறது கதை. இப்பொழுது
மறுபடியும் இந்தக் கதையின் தலைப்புக்குப் போனோமேயானால் அது ரூபம்.
’தங்க ரேகை’ அடையாள அபத்தங்களை, எல்லைகள்
என்ற பெயரில் நடக்கும் கேலிக்கூத்துகளை, இயக்கத்தின் திணறுதல்களை அநாயசமாக
சொல்லிச் செல்கிறது. இந்தக் கதை இப்படி முடிகிறது. ‘அரை ராத்தல் பான் தங்கரேகைக்கு
அந்தப் பக்கம் இருந்தது. அரை ராத்தல் பான் தங்கரேகைக்கு இந்தப் பக்கம் இருந்தது’-பகடியின் உச்சம்.
‘எழுச்சி’ ஒரு தனிமனித காயம், வலி
எவ்வளவு ஆழமானது எனப் பேசுகிறது. தர்மலிங்கத்திற்கு ஊரில் பட்ட காயத்திற்கு
ஃபிரான்சில் பழிதீர்க்கமுடிகிறது. ஆனால் சொந்த வாழ்க்கையோ அவருக்கு வேறொரு முடிவை
வைத்திருக்கிறது. ‘எழுச்சி’யை நாம் வேறொரு
அரசியல் அர்த்தத்தில் புரிந்துகொண்டோமானால் நமக்கு சில ரகசிய சங்கதிகளை பொதித்து
வைத்திருக்கிறார் ஷோபா. அது எழுச்சிக்கு எதிரான எழுச்சி.
கேப்டன் ஒரு மகத்தான
சாகசக்காரனைப் பற்றிய கதை. எந்த சந்தர்ப்பத்திலும் தன்னைக் காத்து ஒரு நாயகத்
தன்மையோடு வாழ்கின்ற ஒருவனின் கதை. வாழ்வு முழுக்க அடையாளச் சிக்கல்தான். சிங்கள
ராணுவத்தால் எல்.டி.டி.ஈ. என்றும் எல்.டி.டி.ஈ.காரர்களால் சிங்கள ஆதரவாளர் என்றும்
கேப்டன் என்றும் ஊராரால் பெருந்தூஷனக்காரன் என்றும் அடையாளப்படுத்தப்படுபவர்.
கதையின் இறுதியில் ஃபிரெஞ்சுக் காதலியால் தரப்பட்ட கல்லறையில் பதிக்கவேண்டிய
சலவைக்கல்லில் ‘கேப்டன்’ என்றிருப்பதைப்
பார்த்து ‘இதை கல்லறையில் பார்த்தால் பார்க்கும் சனங்கள் எங்களை கரையார் என்றல்லவா
நினைப்பார்கள்’ என்று மகனால்
தூக்கியெறியப்படுகிறது அந்தச் சலவைக்கல். வாழ்வு முழுக்க அடையாளச் சிக்கலில்
அலைக்கழிக்கப்பட்ட பொன்ராசா கல்லறையில் எந்த அடையாளமுமின்றி உறங்குகிறார்.
’மாதா’ – இத்தனை யுத்தத்திற்குப்
பிறகும் ஆண்மனம் ஆண்மனமாகவே இருப்பதையும் இத்தனை சிதிலத்திற்குப் பிறகும் ஒரு தாய்
மனம் அல்லது பெண் மனம் என்னவாக இருக்கிறது என்பதையும் பேசுகிறது. ஒரு புதுவித
உத்தியில் இந்தக் கதையைச் சொல்கிறார் ஷோபா. கற்பு கடல்கடந்தும் தொடர்கிறது
பெண்களை. அம்மாக்கள் வாய்க்காலைத் தாண்டுவதைப் போல சுலபமாகத் தாண்டுகிறார்கள் அதை.
’கச்சாமி’ ஒரு பாசிச அரசில் எது
வேண்டுமானாலும் சிக்கலாகக்கூடும் என்பதைப் பேசுகிறது. ஒரு காலத்தில் மறுக்கப்பட்டது/மறைக்கப்பட்டது
மறுபடி தோன்றி காவு கேட்பதைப் பேசுகிறது.
‘காணாமல் போனவர்’ இரண்டுக்கும் மேற்பட்ட
வாசிப்புகளை நம்மிடம் கோரும் கதை. மறுவாசிப்பில் மறுவாசிப்பில் நமக்கு கடும்
அதிர்ச்சி காத்திருக்கிறது. நான் இந்தக் கதையை இப்படி புரிந்துகொள்ள
விரும்புகிறேன். வரலாற்றை மறுபடி மறுபடி வாசிக்கையில் மறுபடி காத்திருப்பது
துரோகங்கள், அதிர்ச்சிகள் மாத்திரமே.
‘லைலா’- இந்தக் கதை தரும் துயரம்
சொல்லொண்ணாதது. கடும் அங்கதம் நிறைந்த இக்கதை இறுதியில் பெரும் துயரத்தோடு
முடிகிறது. இரண்டு கைகளையும் விட்டுவிட்டு சைக்கிள் ஓட்டும் அநாயாசத்தோடு கதை
சொல்கிறார் ஷோபா. ‘சைக்கிள் உருட்டுவது எப்படி’ என்று பயிற்றுவிக்கும்
சங்கங்கள் நிறைந்த நம் நிலத்தில்தான் இந்தக் கதையும் எழுதப்பட்டிருக்கிறது.
இலங்கை நாயகி என்பவரின்
வாழ்வை கதைசொல்லி உற்றுநோக்க முயல்கிறார். கடைசிவரை இலங்கை நாயகியின் சித்திரம் அவருக்குக்
கிட்டவே இல்லை. இலங்கை நாயகி மரித்தும் போகிறார். அவர் ப்ரியத்துக்குரிய நாய்
என்னவாயிற்று என்றும் கதைசொல்லியால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கணக்கில் அந்த நாயும் லைலாவும் வேறுவேறல்ல.
’வாழ்க’ – இந்தத் தொகுப்பின் மிக
முக்கியமான கதையென்று கருதுகிறேன். கண்முன் இந்த ஊழிப்பெருங்கூத்தை கண்டவர்
இன்னும் சாதியை கடக்கமுடியாதிருப்பதைப் பேசுகிறது. ஜெர்மன் காட்டுக்குள்
கொண்டுபோய் மகளை எரிக்கும் வெள்ளாள வெறியைப் பேசுகிறது. அதைப் பற்றி ஒருபொழுதும்
பேசாத தமிழ் பேப்பரை பற்றியும் தமிழ் ரேடியோவைப் பற்றியும் பேசுகிறது. இந்தக்
கதையின் கடைசி வரி இப்படி இருக்கும்: ‘சனநாயகம் வாழ்க! இதுக்குள்ள நாஸி பிரச்சனை,
அகதிப் பிரச்சனை, தலைமுறை பிரச்சனை, இனப்பிரச்சனை, சாதிப்பிரச்சனை எல்லாம்
அடங்குதுதானே?’
வண்ணதாசன் தன் கதையொன்றை
இப்படித் துவங்குவார். ‘எந்த மரத்தை வெட்டப்போகிறோமோ அந்த மரத்தின் நிழலில்தான்
அதை வெட்டுவதற்கான கயிறையும் தாம்புக் கயிறையும் கோடரியையும் வைக்கிறோம்.’ ’கண்டிவீரன்’ இந்தத் தொகுப்பின் மகத்தான
கதை. இந்தக் கதையை நான் அப்படியே இங்குள்ள நாற்பதாண்டு கால எம்.எல். இயக்கங்களுக்குப்
பொருத்திப் பார்க்கிறேன். ஒருவனுக்கு தூக்குத் தண்டனை விதித்து அதற்கு துப்பாக்கி
இல்லாது, துப்பாக்கி வாங்குவதற்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவனைக் கொண்டே ஒரு
வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டு, அவனைக் கொண்டே ஒரு துப்பாக்கியைக் கவர்ந்து
அதைக்கொண்டே அவனைக் கொல்வதாகத் தீர்மானித்து பின்பு அந்தத் துப்பாக்கியாலேயே இந்த
அறுவர் போராளிக்குழு பெரும் போராளிக்குழுக்களிடமிருந்து இந்தக் கொலைகாரனால்
காப்பாற்றப்படுகிறது. ’கண்டிவீரனை’ சிரித்துக்கொண்டே
படிக்கையில் கடைசியில் கண்ணீரைத் துடைக்க கை மேலே எழுகிறது. ‘கைப்பு’ என்கிற பழந்தமிழ் சொல்லுக்கு
கசப்பு என்று பொருள். இத்தனை கைப்பான பகடிக் கதையை நான் தமிழில் வாசித்ததே இல்லை.
இத்தனை பகடி நிறைந்த அரசியல்
கதைகள் தமிழில் மிகக் குறைவு. ராசேந்திர சோழனின் ’புரவி’ கதை மாத்திரமே சட்டென்று
ஞாபகத்துக்கு வருகிறது.
துப்பாக்கிக் குழலிலிருந்தே
அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்பார் மாவோ. எவர் கையில் துப்பாக்கி இருக்கிறது
என்பதைப் பொருத்தே அது அரசியலா அல்லது அதிகாரமா என்பது தீர்மானமாகும். இந்தத்
தொகுப்பு நெடுக மாவோவின் இந்த மேற்கோள் எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த
தோழர் இசக்கி ஒருமுறை என்னிடம் கூறினார். ”ச.தமிழ்செல்வனிடம் போய் நான், ஜெயமோகனின் ’பின் தொடரும் நிழலின் குரலு’க்கு மாற்றாக நம்ம
பக்கதிலிருந்து ஒரு நாவல் எழுதணும் தோழர் என்றேன். அதற்கு அவர் ‘ம்..எழுதணும்
எழுதணும்’ என்று சொன்னார்” என்றார். அப்படி
எழுதப்படாததிலே நம் வீழ்ச்சி இருக்கிறதென்று நான் நம்புகிறேன்.
இந்தக் கட்டுரையை இக்கரை,
எதிர்க்கரை என தொடங்கினேன். கல்யாண்ஜியின் ஒரு கவிதை உண்டு.
‘இக்கரைக்கும்
அக்கரைக்கும்
பரிசலோட்டி பரிசலோட்டி
எக்கரை
என் கரையென்று மறக்கும்
இடையோடும் நதி
மெல்ல சிரிக்கும்’
2009 மே மாதத்திற்குப் பிறகு
காலநதி நம்மைப் பார்த்து நகைக்கவே செய்கிறது நண்பர்களே.
-
சாம்ராஜ்
நூல் : கண்டிவீரன்
ஆசிரியர் : ஷோபாசக்தி
வெளியீடு : கருப்புப் பிரதிகள்
பி55, பப்புமஸ்தான்
தர்கா
லாயிட்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை –
5
அலைபேசி
: 94442 72500
பக்கங்கள்: 192
விலை : 160.00
கல்குதிரையில் மே -2014ல் வெளியான கட்டுரை
Comments
Post a Comment