அப்பாவின் பிள்ளைகள்



கவின் மலரின் நீளும் கனவு சிறுகதைத் தொகுப்பு எட்டு கதைகளை கொண்டது என்னளவில் இதில் இரண்டு கதைகள் மிக முக்கியமானவை. ஒன்று மீனு குட்டி மற்றொன்று இரவில் கரையும் நிழல்கள்.
மீனுக்குட்டி கதையின் சாரம் இதுதான். பத்து வயதான மீனுக்குட்டி, தான் பிறந்த பொழுது பெண் குழந்தை பிறந்ததற்கும், கருப்பாய் பிறந்ததற்கும் அப்பா அழுததாய் பாட்டியின் வழி கேள்வி படுகிறாள். ஒருதினம் முழுக்க அப்பாவிடம் அதை கேட்பதற்காக காத்திருப்பதே கதை.
அப்பாவிடம் கண்ணை மூடிக் கொண்டு அழுதயா அப்பா எனக் கேட்க அப்பா ஆமாம் என்கிறவர் தொடர்கிறார். அப்போது பிறந்தது மீனுக்குட்டினு தெரியாதுல்ல, ராசாத்தின்னு தெரிஞ்சுருந்தா அழுதுறுக்க மாட்டேன் என்கிறார். அது நாம் மெய்யுறுகும் தருணம்.

இந்த கதை தமிழில் மிக முக்கிய கதையாக வந்திருக்க வேண்டியது. அது தவறும் இடமென நான் கருதுவது அப்பா பதில் சொல்லும் இடத்தை நோக்கி நம்மை படிப்படியாக நகர்த்தி சென்றிருக்க வேண்டும். இந்தக் கதை பத்து வயது மீனுக்குட்டியின் வாயிலாகவே சொல்லப்படுகிறது. மீனுவின் மட்டத்திலேயே சொல்லப்பட்டிருக்க வேண்டும். மீனுக்குட்டியோ காம்ப்ளான் குடித்த குழந்தையாய் கூடுதலாக பேசுகிறாள் யோசிக்கிறாள்.
பத்து வயது மீனு எதிர்காலம் பற்றி யோசிக்கிறாள். தனக்கு மூட் இல்லை என்கிறாள். கடைசியாக அப்பாவை கட்டியணைத்து அழும் போது ஓரக்கண்ணால் தங்கள் கண்களை துடைத்துக் கொள்ளும் அம்மாவையும், பாட்டியையும் பார்த்துக் கொள்கிறாள். இதுதான் என்னை மீனுக்குட்டியிடமிருந்து அன்னியமாக்குகிறது. கதையின் மாந்தர்கள் எவ்வளவு அசலாய் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு கதைக்கு இலாபம்.
இது அத்தனையும் தாண்டி இந்தக் கதை நம்மை பாதிக்கச் செய்கிறது. நாமும் இப்படி கேள்விகளோடு காத்திருந்தோம். நமக்கு அப்பா கொத்து புரோட்டா வாங்கி வரவுமில்லை, பதில் சொல்லவுமில்லை. நாம் அழுத கண்ணீரும் மீனுக்குட்டி அழுத கண்ணீரும் ஒன்று தானே. லாட்டரியில் ஒரு பெரிய தொகையை இரண்டு எண் வித்தியாசத்தில் இழந்தது போல கவின் ஒரு சிறந்த கதையை சில கோளாறுகளினால் நல்ல கதை என்ற நிலத்தில் தரையிரக்குகிறார்.
இரவில் கரையும் நிழல்கள் இந்த தொகுப்பின் ஆகச்சிறந்த கதையென சொல்வேன்.
ஆண்கள் இடமற்று அலைவதைப் பற்றி தமிழில் அனேக கதைகளுண்டு. ஒரு பெண் இரவில் இடமற்று அலையும் கதை தமிழில் இல்லவே இல்லையென சொல்லலாம் (தமிழ் சினிமாவிலும் விளம்பரங்களிலும் இரவு தங்க இடமற்று அலையும் பெண்கள் உண்டு. ஒரு நண்பர் ஈராணியத் திரைப்படம் தி சர்கிளே ஏ.பி. நாகராஜனின் நவராத்திரியைப் பார்த்து எடுக்கப்பட்ட படம்தான் என்று தீவிரமாக வாதிடுவார்) தமிழ் படைப்பாளிகள் வேறு யார் தமிழ் ஆண்கள்தான் பத்து மணிக்கெல்லாம் பெண்களை தமிழ் கதைபரப்பில் வீட்டில் கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். அல்லது அவர்களே பேட்ரோல் வேனில் வந்து மைக்கில் மாறுகுரலில் மிரட்டுகிறார்கள். இப்படி சொல்லி பார்ப்போமே, சுஜாதா, ராஜேஸ்குமார் துப்பறியும் கதைகளில் வரும் பெண்கள் இரவில் அலையும் அளவிற்கு கூட நவீனத் தமிழ் கதைபரப்பில் பெண்கள் பத்து மணிக்குமேல் நடமாடுவதேயில்லை
நிறைய திறப்புகளை, கேள்விகளை, உரையாடல்களை நம்முன் வைக்கிறது இக்கதை பெண்களிடையேயான நட்பு, அதன் எல்லை, அவர்களுக்கான வெளி, தனித்து வாழும் பெண், குடும்ப சட்டகம், இரவு, வலி என விரிகிறது இக்கதை.
இரவில் கரையும் நிழல்கள் ஒரு துயர்மிகு பொருத்தப்பாடான கவித்துவமான தலைப்பே ஒரு பெண்ணுக்கு துயரெனில் ஏகாந்தமாக எங்கும் புறப்பட்டுவிட முடியாது. ஏதோ ஒரு இருட்டில் வரையறுக்கப் பட்ட சட்டத்திற்குள் தன்னை கரைத்துக் கொள்ள வேண்டும். கவிதா பேருந்து இருட்டில் தன்னை கரைக்கிறாள். இந்த கதையில் உறுத்தும் ஒரே ஒரு அம்சம் இரவு திருவண்ணாமலை வரை பயணிக்கும் திட்டத்தை ஒரு தமிழ் சினிமா ஞாபகப்படுத்த வேண்டியதில்லை அது ஏதோ ஒரு வகையில் கதையின் சுயத்தை பாதிக்கிறது.
மின்மினி வெளிச்சம் உயரமாக முடியவில்லையேயென வருந்தும் சிறுவன் கதையின் கடைசியில் காம்ப்ளான் வாங்கி வருகிறான்.
கந்தர்வனின் கதையொன்று உண்டு பிரகடனக் கதை தான். மிகவும் சிரமப்பட்டு தொலைக்காட்சி பெட்டி வாங்குகின்றவர்கள் அதற்கு ஆன்டனா வாங்க பணமில்லாமல் அப்படியே போட்டு வைத்து விடுகிறார்கள். பின் ஒருவாறாக பணம் திரட்டி ஆன்டனா வாங்கி அதை நிறுவி தொலைக்கசாட்சியை இயக்கினால் அதில் ஒரு விளம்பரம் வருகிறது நீங்கள் தொலைகாட்சி வாங்கி விட்டீர்களா அடுத்து வாங்க வேண்டியது பிரிட்ஜ்என்பதாய் கதை முடிகிறது. கதையின் தலைப்பு அடுத்தது எண்பதுகளில் எழுதப்பட்டது கவினும் இதை நோக்கியே நம்மை நகர்த்த முயற்ச்சிக்கிறார் அது நிகழவில்லை. தமிழ் கதை காம்ப்ளானெல்லாம் குடித்து அடுத்த கட்டத்திற்கு போய் விட்டது.

மெய் போன்ற கதை பெயர் போலவே மிக ஆபத்தானவை கள அனுபவத்தை கலையாக்கும் பொழுது அது நிகழவில்லையெனில் இந்த கதையின் கதை சொல்லி மருத்துவமனையில் அகாலமாய் உயிர் விடுவதைப் போல கதையும் உயிர் விடும். இங்கும் அப்படியே ஒரே நேரத்தில் கதையும் கதை சொல்லியும் மரிக்கின்றனர்.
மீதமுள்ள நாலு கதைகளில் நீளும் கனவு தவிர்த்து மற்ற மூன்று கதையும் வெள்ளை மனது கதைகள்.

வெள்ளை மனது கதைகளுக்கான காலம் எப்பொழுதோ முடிந்து விட்டது என்றே தோன்றுகிறது. இன்று வாழ்வு மிகவும் சிக்கலாகி விட்டது. அதை எதிர்கொள்ள இன்னும் ஆழமாய் சிக்கல்கள் குறித்து நாம் எழுத வேண்டியிருக்கிறது.

இந்த தொகுப்பிலேயே அப்படியான முரண் உண்டு. இரவில் கரையும் நிழல்கள், நீளும் கனவு, போன்ற கதைகளுக்கு நேர் எதிரான சுலப தவனை போல சுலப தீர்வு கொண்ட கதைகள் மின்மினி வெளிச்சம், மூன்று நிற வானவில், அண்ணன் போன்ற கதைகள். ஆராய்ந்து பார்த்தோமேயானால் ஆர்வமூட்டக் கூடிய முரண்தான்.

கவின் மலரின் அரசியல் வாழ்விலேயே இதற்கான பதில் இருக்கிறது. திராவிடக் கருத்துக்களில் தொடங்கி பின்பு த.மு.எ.ச சிபிஎம் என நீண்டு பின்பு அதனிலிருந்து வெளி வரும் படைப்பாளி இப்படியான முரண்களோடு இருப்பது இயல்பே. மார்க்சிய கருத்துகளின் சார்பில் மூன்று நிற வானவில் கதைகளெனில் அதற்கு பிறகு கிடைத்த கருத்தியல் புரிதலின் அடிப்படையில் இரவில் கரையும் நிழல்கள், நீளும் கனவு போன்ற கதைகள்.

இடது சாரி கட்சிகளின் இலக்கிய அமைப்புகள். எங்களுர் பக்கம் செத்த பாம்பை கையில் பிடித்து உருவினால் சமையல் நன்றாக வரும் என்பார்கள் அது போல் ஆகிப் போனது இந்த இலக்கிய அமைப்புகள். பேனா கேட்டால் மூடியை சுழற்றிக் கொண்டு ஐந்து ரூபாய் பேனாவை கொடுக்கும் ஒரு சூழலில் நாம் நடமாடும் பாதைகள் ஏறக்குறைய ஒரு வழிப் பாதையாய் ஆகிவிட்ட சூழலில் எல்லோரையும், எல்லோரும் காரியநிமித்தமாகவே சந்திக்கும் ஒரு வாழ்வில். இடது சாரி கட்சிக்குள் சமூக நோக்கத்தோடு இணைபவர்கள் நேசிப்புக்குரியவர்கள். பின்பு அதன் நீர்த்து போன தன்மை கண்டு வெளியேறுகின்றவர்கள் பெரும் பிரியத்திற்கும், மரியாதைக்கும் உரியவர்கள். அவர்கள் தம் இளமையில் பத்தாண்டுகளை தொலைத்தவர்கள். சமரசமற்ற உண்மையின் பொருட்டே அவர்கள் வெளியேறுகிறார்கள். அதன் பிறகு காத்திரமாய் எழுதவும் செய்கிறார்கள். நிறைய உதாரணங்கள் உங்களுக்கும் எனக்குமே தெரியும். 

இந்த அபிமன்யு முற்றுகையை உடைத்தவர்கள் முக்கிய படைப்பாளியாகின்றனர். உடைக்க முடியாதவர்கள் உடைக்க விரும்பாதவர்கள் சிறு தெய்வங்கள் ஆகின்றார்கள் படையல் தொடர்கிறது.
கவின் உடைத்து வந்திருக்கிறார் அவருக்கு அமைப்பு, அரசியல் செயல்பாடு என நீண்ட அனுபவமிக்க வாழ்விருக்கிறது. அவரிடம் நாம் உறுதியாக எதிர் பார்க்கலாம் காத்திரமான வரிகளை.
பேராசான் பிரட்ரிக் ஏங்கல்ஸ் இப்படிச் சொல்வார். பொதுவுடைமை வாதிகளுக்கு இப்படி ஒரு அபிப்ராயம் உண்டு. இலக்கியமெனபது அரசியலின் பணிப்பெண் என. அந்த தட்டை எடுத்துக் கொண்டு வா.. அந்த கோப்பை அங்கே கொண்டு வை.. என ஏவுகிறார்கள். இலக்கியம் ஒரு பொழுதும் அரசியலின் பணிப்பெண் அல்ல. அது சுயேட்சையானதுஏரக்குறைய 1860 வாக்கில் எழுதப்பட்டது. 160 வருடங்கள் ஆகியும் இடது சாரிகள் இதனை ஏற்க்க தயாராயில்லை.

லா.ச.ரா எழுதினார் நெருப்பென்றால் வாய் வெந்து விட வேண்டும் என்பதாய் இருக்க வேண்டும் என் எழுத்துஅவருக்கே அவ்வளவு என்றால் ஜென்டில்மேன் படத்தில் ஒரு வசனமுண்டு சப்பாத்தி சாப்படுர உனக்கே இவ்வளவுனா சால்னா குடிக்கிர எங்களுக்கு எவ்வளவு இருக்கும்நாம் மக்களின் மனதை தொட வேண்டியவர்கள். பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது நாம் பேசினால் இற்று விழ வேண்டும் இதயங்கள். கர்த்தரின் திராட்சை ரசம் போல எல்லோரிடமும் மனிதத்தை சுரக்கச் செய்வதே நம் எழுத்து.

தமிழில் இடதுசாரி எழுத்துக்களில் கந்தர்வனும், தமிழ் செல்வனும் நேசிக்கத் தகுந்த விதிவிலக்கு. அவர்களுக்கு பிரட்ரிக் ஏங்கல்ஸ் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் செய்திருப்பாரோ என்னவோ.
தமிழ் செல்வனின் ஒரு கதையோடு என் உரையை நான் முடிக்கிறேன். அன்னியமாதல் குறித்து பேராசான் காரல் மார்க்ஸ் நிறைய எழுதியிருக்கிறார் 1979ல் கிரியா பதிப்பக வெளியீடாக அன்னியமாதல் என்ற 300 பக்கங்களை எஸ்.வி. ராஜதுரை எழுதுகிறார். தமிழ் செல்வனின் அப்பாவின் பிள்ளைகள் கதையின் சாரம் இதுதான். 

கதை இப்படி துவங்குகிறது தன் அப்பாவுக்கு இயற்கையை ரசிக்கத் தெரியவில்லையே, எப்பொழுதும் கோபமாய் இருக்கிறார், அழகியலே இல்லை என மகனின் புகார்களோடு கதை துவங்குகிறது. அன்றைக்கு அவன் முதன் முதலாக தீப்பட்டி ஆபிஸிற்கு வேலைக்கு போக போகிறான். அதில் வேலை பார்க்கும் பெண்களை நினைக்கும் பொழுது லேசாக வசிகரமாய் இருக்கிறது அவனுக்கு. காலை முதல் விடாது வேலைகள் கொடுக்கிறார்கள். மூன்று மணிக்கு சாப்பிட விடுகிறார்கள் பின் மறுபடியும் வேலை. ஆறு மணிக்கு கேசியர் அவனையும் அழைத்துக் கொண்டு சம்பளம் போட போகிறார். இவனுக்க லேசான கிளுகிளுப்பு அந்த பெண்களை பார்க்கலாமென. அந்த பெண்கள் பத்தடி தூரத்தில் வரும் பொழுதே அவர்களின் மீது அடிக்கும் மருந்து வாடையை தாங்க முடியவில்லை. அவர்களை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை அவனால். பின் மறுபடியம் வேலைகள் இரவு 11 மணிக்கு முதலாளி நீ இன்னும் புறப்படலயா என்கிறார். காலையிலே சீக்கிரமாய் வந்துடு என்கிறார். இவன் சைக்கிளில் வீட்டை நெருங்கும் பொழுது வீட்டில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டிருக்கின்றன. இவனுக்கு அழுகை வருகிறது மிகவும் அனாதையாய் உணருகிறான். கதவை தட்டுகிறான் அம்மா, அம்மா என இரண்டாம் முறை தட்டியவன் அதிர்ந்து நிற்கிறான் அப்பாவைப் போலவே கதவை தட்டுகிறோமே. கண்ணீரில்லாமல் இந்த கதையை நான் வாசித்த்தே கிடையாது. எஸ்.வி.ஆரின் அன்னியமாதல் புத்தகத்தை மிஞ்சியது இச்சிறுகதை. தமிழின் மகத்தான சிறுகதை. அப்பாவின் பிள்ளைகளைத்தான் நாம் எப்பொழுதும் பின் தொடர வேண்டும். அப்பாவின் பிள்ளைகள் அதைத்தானே செய்ய வேண்டும்.
நன்றி... வணக்கம்.

பனுவலின் கவின் மலரின் நீளும் கனவு சிறுகதை தொகுப்பிற்காக வாசிப்பட்ட கட்டுரை

Comments