அரசியலோடு பிணங்காத கலை (அழகிய பெரியவன் சிறுகதைகளை முன்வைத்து….)



1990 அம்பேத்கர் நூற்றாண்டோடு தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய போக்கு துவங்கியது... அது வரை தமிழ் இலக்கியத்தின் வேலியோரம் கூட வராத மாந்தர்கள் திரண்டு வந்தார்கள். தலித் இலக்கியம் என்கிற அந்த புதிய வகைப்பாட்டின் அடிப்படையில், தமிழ் கதைப் புலத்தில் 1990க்கு முன் தலித கதாபாத்திரங்கள் எங்கே என கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் மிகத் துயரமானது. இந்தக் கட்டுரைக்காக தமிழின் முக்கிய படைப்பாளிகளின் முழு தொகுதிகளை புரட்டினால் ஒரு தலித் பாத்திரம்கூட இல்லாத தொகுப்புகளாக அவை இருக்கின்றன. [தமிழ் சினிமாவில் வில்லன் அடியாட்களை அழைப்பாரே ஜான், பீட்டர் என அப்படிக் கூட இல்லை].

இப்படி தலித் குரல்கள் தமிழில் வலுவாக ஒலிக்கத் தொடங்கிய காலத்தில் அழகிய பெரியவன் எழுத வருகிறார். அப்படி எழுதிய தலித் படைப்பாளிகளின் படைப்புகளில் கலை எவ்வளவு தூரம் துலங்கியிருக்கிறது என்பது வேறொரு உரையாடல்.
அவரது தீட்டுதொகுப்பின் வழியே அவரது உலகத்திற்குள் நான் நுழைந்தேன். தீட்டுக் கதை இன்றளவும் என்னை பயமுறுத்தக்கூடியது. என்னளவில் தீட்டுகுறுநாவலும் ச. பாலமுருகனின் ‘சோளகர் தொட்டியும்ஜெயமோகனின் ‘ஏழாம் உலகத்தில்சில அத்தியாயங்களை வாசிக்கும்பொழுது எனக்கு காய்ச்சல் வந்தது. இயக்குநர் பாலாவின் ‘சேதுதிரைப்படத்தில் விக்ரம் தலையை கல்லில் கொண்டுபோய் மோதும் காட்சியும் பருத்திவீரனில் இறுதிக்காட்சியில் பிரியாமணியின் பாலியல் வன்புணர் காட்சியும் இன்றளவும் மனதை நடுங்கச்செய்வன. முதன்முறை திரைப்படத்தை பார்க்கும்போது மாத்திரமே அந்தக் காட்சிகளை பார்த்தேன். அடுத்தடுத்த முறை திரையில் அதைப் பார்க்கும்போது இறுக கண்களை மூடிக்கொள்வேன். அதற்கு நிகரான பயத்தை தீட்டு தந்தது. மனம் நடுங்கச் செய்யும் கதை அது.  

இந்தத் தொகுப்பில் அழகிய பெரியவன் 1998ல் எழுதத் தொடங்கிய கதைகளிலிருந்து 2012 வரை எழுதிய 56 கதைகள் இருக்கின்றன.
அழகிய பெரியவன் தன் முன்னுரையில் மிக முக்கிய அவதானிப்பொன்றைச் சொல்கிறார். “தலித் இலக்கியம் என்ற தனி வகைப்பாட்டினால் அதிக அனுகூலமும் வெளிச்சமும் கிடைக்கப் பெற்றவர்கள் இவர்கள் என்று சிலர் என்னைச் சொல்லியிருக்கிறார்கள். வகைப்பாடுகள் இடஒதுக்கீடுகள் அல்ல. அறிவியிலில் வகைப்பாடு என்பது பன்மைய உயிர்த்தன்மை உடைய உலகைப் புரிந்துகொள்வதற்கே உதவி செய்கிறது. அதுபோலத்தான் இலக்கியத்திலும் பன்முக வாழ்க்கையின் வெளிப்பாடுகளை வகைப்படுத்துதல் சாத்தியமாகிறது. ஆனால் ஒரு படைப்பாளியின் இறப்பும் வாழ்வும் காலத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. உண்மையற்றதும் கலைத்தன்மை குன்றியதுமான எந்தப் படைப்பும் படைப்பாளிக்கு முன்பாகவே இறந்துவிடும் என்பது உறுதி. தலித் எழுத்தாளன் என்ற என் அடையாளத்தை நான் துறக்கவே விரும்புகிறேன். அதை ஒரு சலுகையாக ஒருபோதும் நான் கருதியதில்லை. வளமார்ந்த தமிழின் ஆளுமையால் தாக்குண்டு எழுத வந்தவர்களில் நானும் ஒருவன். அவ்வளவே! எனக்கு இலக்கியம் குறித்து அரசியல் பார்வை இருந்தாலும் எழுத்தை கலைத்தன்மையும் அழகியல் பொழிவும் கொண்டதாகத்தான் பார்க்கிறேன். முழக்கங்கள் மட்டும் எழுத்தாகா. அரசியலும் அழகியலும் நெருக்கம் பூண்டு உருவாவதே தேர்ந்த படைப்பு என்பது என் நம்பிக்கை”. இந்தக் குரல் தமிழில் மிக அரிதான குரல். கலையின்பொருட்டு அரசியலை புறந்தள்ளாத, அரசியலின் பொருட்டு கலையை புறந்தள்ளாத குரல்.

தமிழ்ச்சூழலில் எப்பொழுதும் அரசியலும் அழகியலும் மாற்றி மாற்றி குடும்ப நீதிமன்றத்தில் மணவிலக்கு கோருவது வழமை. எங்கள் இருவருக்குள் உடன்பாடே இல்லை; எங்களைப் பிரித்துவிட்டு விடுங்கள் என்கிற குரல்களை தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.
அழகிய பெரியவன் 1998ல் வெளிவந்த தனது முதல் கதையான ‘கூடடையும் பறவைகள்’ –இலிருந்து 2012ல் வெளிவந்த ‘பொற்கொடியின் சிறகுகள்’ வரை  அரசியலோடு பிணங்காத கலையிலிருந்து வழுவாது நிற்கிறார்.

அழகிய பெரியவன் தனது கதைகளில் தலித் குரலை மாத்திரம் ஒலிக்கிறாரா எனில் அப்படி அழகியபெரியவனை அந்தச் சிமிழுக்குள் மாத்திரம் அடைத்துவிட முடியாது. வேறு பல்வேறு குரல்களும் இக்கதைகளில் ஒலிக்கின்றன. நிலத்தை இழந்தவன், நிலத்தை நேசிக்கும் சாலம்மாள், பெண் மனம் தேடும் மனம் பிறழ்ந்த சிம்சோன், பிணவறைக்குள் இறங்குவதுபோல தன் பழைய நிலத்தில் துவங்கப்பட்ட தோல் தொழிற்சாலையில் தோல் பதனிடப்பட்டு தொட்டிக்குள் இறங்கும் வெள்ளையன், பிச்சைக்காரியாய் மாறி தன் மகனைப் பார்க்கும் சீனுக்கிழவி, புதிய உறவில் தெளிவு பெறும் சீதா, கிளியென பறந்துபோகும் ஷர்மிளா, தங்கள் சிறுநீரால் பள்ளியை மூழ்கடிக்கும் மினுக்கட்டான் பொழுது சிறுவர்கள். தன் பால்ய கால தோழனின் கல்யாணத்தில் ஆடும் யட்சினி, காடு வளர்க்க லஞ்சம் வாங்கும் வேல்முருகன் இப்படி பலவித குரல்கள் ஒலிக்கின்றன. மிக அரிதாகவே இவர் பிரசாரத்துக்கு அருகில் போகின்றன இவரது கதைகள்.  
இசங்கள் எப்போதும் தமிழ்ச்சூழலில் கலையை காவு கேட்பது வழமை. நமக்கு நிறைய முன்னுதாரணங்கள் உண்டு. பா. செயப்பிரகாசம், அஸ்வகோஷ், ச.தமிழ்ச்செல்வன் போன்றவர்களை உடனடி உதாரணமாகச் சொல்லலாம். இவர்கள் அரசியல் பணியில் ஈடுபடத் தொடங்கும்போது கலை ஊற்று எங்கோ அடைபடத் தொடங்குகிறது. ஒன்று செயப்பிரகாசம் போல சூரிய தீபனாய் உருமாறி பிரகடனமாக எழுதத் தொடங்குகின்றனர். அல்லது அஸ்வகோஷ், தமிழ்ச்செல்வன் போல படைப்புவெளியிலிருந்து விலகத் தொடங்குகின்றனர்.  ‘வெயிலோடு போய்’ தமிழ்ச்செல்வனை நாம் விடாது ‘வாளின் தனிமை’யில் தேடிப் பார்க்கிறோம். நமக்கு மிஞ்சுவது பெரும் ஏமாற்றமே. அஸ்வகோஷ் ஒரு கட்டத்தில் எழுதுவதையே நிறுத்திவிடுகிறார். அரசியலும் கலையும் முரண்படாத ஒரு புள்ளியை இதுவரை நம் அரசியல் இயக்கங்கள் கண்டடையவில்லை. 

இவர்களிலிருந்து ஓர் இனிய விதிவிலக்காக அழகிய பெரியவன் இருக்கிறார். தமிழ் தேசிய அமைப்பு ஒன்றில் மாவட்ட அமைப்பாளராக செயல்பட்டவர் மார்க்சிய அம்பேத்கரிய அமைப்புகளுடன் அறிமுகமும் தோழமையும், தமிழ் அமைப்புகளோடு தீவிர தோழமையும் கொண்ட ஒருவர் தன் படைப்பு மனதை காப்பாற்றி வைத்திருப்பது மிகவும் அரிதான ஒன்றுதான்.
பேராசான் எங்கல்ஸ் கலை பற்றிப் பேசும்பொழுது, “ஒரு கலைப் படைப்பு தீர்வுகளை தங்கத்தட்டில் வைத்து வழங்கவேண்டிய அவசியம் இல்லை” என்பார். இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் நமக்கு தீர்வுகள் எதையும் சொல்வதில்லை. இவை இப்படி இருக்கின்றன என்று நேர்மையாகச் சொல்கின்றன. அதனிலிருந்து திரண்டெழுந்து கொள்வது நம் அகம் சார்ந்த நேர்மை.

தொண்ணூறுகளுக்குப் பின்பு எழுதவந்த தமிழ்ப் படைப்பாளிகளில் அழகிய பெரியவனின் கதைகளில் தென்படும் அளவிற்கு காடும் ஆறும் பறவைகளும் மிருகங்களும் பல்வேறு வகை தாவரங்களும் காட்டுப் பழங்களும் பிறரின் படைப்புகளில் தென்படுவதே இல்லை.
இவரது கதைகளில் வரும் எல்லா பெண் பாத்திரங்களையும் இணைக்கும் ஒரு மையச் சரடு இருக்கிறது. அந்த இழை அல்லலுறும் பெண்கள் என்பதே. இவரது கதைகளில் மகிழ்ச்சியான பெண்கள் மிகவும் குறைவு. சந்தோஷ நரம்பு அறுக்கப்பட்டவர்களே இவரது மனுசிகள்.  இவர் கதைகளில் வரும் ஆண்களாவது குடித்து விழுந்து எழுந்து தற்காலிகமாகவேனும் வாதைகளில் இருந்து தப்பிக்கிறார்கள்.

இவரது கதைகளில் மனிதர்கள் விடாது வதைபடுகிறார்கள். மகன்களால் அம்மாவும் அப்பாவும் புறக்கணிக்கப்படுகின்றனர். நிலத்தை நேசிப்பவன் தோல் பதனிடும் தொழிற்சாலையில் அதிகாலைக் குளிரில் இறங்கவேண்டியவனாய் இருக்கிறான். கழுத்தறுபட்ட மாடுகள் ஓடுகின்றன. முதல்முறையாக படிக்கும் தலித் பெண்ணின் வீடு மீது விடாது கல்வீசப்படுகின்றது. மிகச் சாதாரணமாக சாமானியர்களின் உயிர் பறிக்கப்படுகின்றது. சிறுவர்கள் வீட்டைவிட்டு ஓடுகின்றனர். சாதி எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. எஜிமான்கள் ஞாயிற்றுக்கிழமை மதியம் மென்ற எலும்பாய் தன்னிடம் நாற்பது ஆண்டுகளாய் வேலை பார்த்தவனை துப்புகிறார்கள். சாதிமான் வீடுகளில் நண்பர்கள் சாதியை மாற்றிச் சொல்லச் சொல்லி கூட்டிப்போகிறார்கள். அப்பனின் கண்ணை குருடாக்கியவனை அவனின் அந்திமத்தில் சந்திக்கிறார்கள். காதலுக்காக ஆந்திரா வரை போகிறார்கள். நடுச்சாமத்தில் பேய்களுக்கு நடுவே மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டு போகிறார்கள். இப்படி பலவாறாய் போகிறது இவருடைய கதைகள்.

என்னளவில் அழகிய பெரியவனின் மீதான மிகப்பெரிய ஈர்ப்பு அது பிரசாரத்திலிருந்து ஒளிவருட இடைவெளி விலகி நிற்பதுதான். நாம் இங்கே நமது கோஷங்களின்வழி கொன்றது அதிகம். நமது பிரகடனங்கள் வெற்றுப் பிரகடனங்கள். கலை ஆழ்மனதில் போய் வேலை செய்ய வேண்டும். குடியை மறக்க நடத்தும் மருத்துவமனைகளில் ஒரு கஷாயம் கொடுப்பதாகச் சொல்வார்கள். அது உள்ளே சென்றபின் மதுவை வாயின் அருகே கொண்டு சென்றால் குமட்டும் என்பார்கள். கலை ஒரு மனிதனின் மனதை அப்படித்தான் நெய்கிறது. கோஷங்கள் தற்காலிகமாய் ஒருவரை தடுத்து நிறுத்தும். கலை சாஸ்வதமாய் எதிர்மறையிலிருந்து விலக்கும். இந்த மதுவிலக்கு போராட்ட காலத்தில் நான் பேசுவது மதுவைப் பற்றி அல்ல என்பது உங்களுக்கும் தெரியும்.
விலங்கு, நடுவானில் ஒரு வானவில், வீச்சம், குடை, பூவரசம் பீப்பி, யட்சினி, தொறப்பாடு, வெளுப்பு, முள் காடு, புலன் ஆகியவை இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் முக்கியமான கதைகள் இவை என நான் கருதுகிறேன் தமிழ் கதைப்பரப்பில் முன்பின் இல்லாத கதைகள்.
இந்தத் தொகுப்பில் உள்ள மகத்தான மூன்று கதைகளை சொல்வதின் வழி என் தரப்பை நிறுவ முயல்கிறேன்.

தரைக்காடு – மலையின் அடிவாரத்திலிருந்து ஒரு நள்ளிரவில் பிரசவத்திற்காக ஒரு பெண்ணை வண்டியில் கூட்டிக்கொண்டு கடக்கும் பாதைகளைப் பற்றியது. அந்தப் பாதையில் பல்வேறு இடர்பாடுகள், மிருகங்கள் , பேய்கள் என எல்லாம் உண்டு. மருத்துவமனை போய் சேர்வதற்குள் பிரசவம் நிகழ்ந்துவிடுகிறது. ”பிள்ளைத்தாச்சிக்கு ரவத்தண்ணி வாங்கிட்டு வாங்க” என உடன்வந்த பெண் கத்துகிறாள். வண்டிக்கு முன்னால் ஓடிவந்தவண்ணம் “ஆண்டமாரு ஊரு வந்துட்டது” என்கிறான். ரத்தப் போக்குடன் கிடக்கும் அம்மணி பிள்ளையைப் பெற்றபின் தனிக்குடிலில் படுத்திருந்தபோது தாகம் தாங்காமல் ரத்தப் போக்குடைய சிறுநீரைப் பிடித்துக் குடித்துவிட்ட தன் பாட்டியின் நினைவெழும்பிக் கிடக்கிறாள் அம்மணி. தமிழின் துயரப் பெருமிதங்களில் இக்கதையும் ஒன்று.
நீர்ப்பரப்பு – இன்னொரு கதை. இளங்கோவின் ஊருக்கு கரகாட்டம் ஆடவரும் தன் அம்மாவின் ஆட்டத்தை பார்க்க்க்கூடாதென அவன் காதலி சிந்து வாக்குறுதி வாங்குகிறாள். இளங்கோவும் வாக்குறுதியின்பொருட்டு திருவிழா அன்று ஊர் அகன்றவன் மதியத்திற்கு மேல் தாள முடியாமல் திரும்பி வருகிறான். ஒரே கொண்டாட்டமாய் இருக்கிறது. கடைசியில் கரகாட்டமும் பார்க்கிறான். இறுதியில் ஊர் வாலிபப் பிள்ளைகளுக்கும் கரகாட்டம் ஆடவந்தவர்களுக்கும் பிரச்சனை ஆகிறது. இளங்கோ குற்றவுணர்ச்சியுடன் மைதானத்தில் படுத்திருக்கும்பொழுது சிந்துவின் தொலைபேசி அழைப்பு வருகிறது. “ரொம்ப நன்றி இளங்கோ” என்கிறாள் சிந்து.

தமிழ் கதைப்பரப்பில் இதுபோன்ற இக்கட்டான தருணங்களெல்லாம் மிக அரிதாகவே நிகழ்கின்றன. மனித மனத்தின் ஊசலாட்டம அத்தனை துல்லியமாய் நிகழ்கிறது. காலகாலமாய் ஏற்றிவைத்திருகக்கூடிய கருத்துகள் வாய்க்கால்கள் அல்ல, அத்தனை சுலபமாகத் தாண்டுவதற்கு. பெரும்பாலான ஆண்கள் கடந்து வந்ததுதான் இந்தக் கள்ளப் பிரதேசம். இந்தப் பொய்க்கால்களில்தான் ஓடுகிறது நம் உறவுக் குதிரைகள்.
அசோகமித்தரனின் கதை ஒன்று இப்படி இருக்கும். ஒரு அம்மா பத்து வயது மகனும் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவும் காலத்தில் அதிகாலை எழுந்து வீடு வீடாக இரண்டு குடம் தண்ணீருக்காக கெஞ்சி துயரப்பட்டு இரண்டு குடம் தண்ணீரைப் பெற்று மகன் ஒரு குடம் தண்ணீரை எடுத்து வீட்டிற்குப் போக அம்மா இன்னொரு குடம் தண்ணீரோடு சாலையின் ஓரம் நிற்கிறாள் அவள் கவனியாத போது மாடு ஒன்று குடத்தில் வாய் வைக்கிறது. அதைக்கண்டு ஒரு கணம் தயங்கிய அவள் சரி குடி போஎன்கிறாள். இது அசோகமித்தரனின் கருணை. நிச்சயம் இது நல்ல கதைதான்.

கறி–இத்தொகுப்பின் மற்றொரு கதை. இதில் ஐதீகத்துக்கு வேண்டி மாட்டைக் கட்டாமல் வீட்டு முற்றத்தில் வெட்டவேண்டும் என்று சொல்லும் இஸ்லாமியருக்காக மாட்டைக் கட்டாமல் வெட்ட, கழுத்தில் வெட்டுப்பட்ட காயத்தோடு தப்பி ஓடுகிறது மாடு. வெட்ட வந்தவர்கள் மாட்டைத் தேடுகிறார்கள். கதையின் மையப் பாத்திரமான, மாட்டுக்கறி மீது பெருவிருப்பம் கொண்ட இளைஞன் சூரிய அஸ்தமன சமயத்தில் ஆற்றின் அக்கரையில் மாட்டைக் காண்கிறான். அவன் கண்முன் அது அம்மாஎன்று அரற்றியபடி மரிக்கிறது. கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது அவனுக்கு. அசோகமித்திரனை மிஞ்சுகிறது இக்கருணை. இரண்டு கதைகளை ஒப்பிடுவது வன்முறைதான் ஆனாலும் கலையின் பொருட்டு அதை நான் செய்திருக்கிறேன்.  

ஒரு படைப்பாளியின் மொத்தக் கதையையும் தொகுத்து வாசிப்பதென்பது  
ஒருவருடைய புகைப்பட ஆல்பத்தை அவது குழந்தைப் பருவத்திலிருந்து, கருப்புவெள்ளை புகைப்படங்களிலிருந்து வண்ணப்படங்கள், நண்பர்களோடு எடுத்த படங்கள் என புரட்டுவது போலத்தான். துல்லியமாக அவர் வளர்ந்து எப்படி மாறி வந்திருக்கிறார் என்பதற்கு அதைவிட சிறந்த சாட்சி வேறில்லை. ஆனால் அத்தனை படங்களும் துல்லியமாக இருக்க முடியாது. அவுட் ஆஃப் போகஸ்கள், மரத்தை எடுக்க கிளை மாத்திரம் பதிவாக முன்னால் இருக்கும் மனிதர்கள்  கலங்கலாக பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மாத்திரம் துல்லியமாக, அடையாளம் சொல்லமுடியாத குரூப் போட்டோக்களாகவும் அந்த ஆல்பம் இருக்கும். இந்தத் தொகுப்பை வாசிக்கும்பொழுதும் அப்படியான அனுபவமும் நமக்கு நிகழத்தான் செய்கிறது.

இந்தத் தொகுப்பில் இரண்டு மூன்று இடங்களில் ஒரு வரி திரும்பத் திரும்ப வருவதுண்டு. “இப்படியே குறுக்குப் பாதையில் போனால் ஆந்திராவை அடையலாம்” என்று. இந்தத் தொகுப்பை சரியாய் வாசிக்கும் யாரும் ஆத்திரத்தை அடைவார்கள். அது கலையின் வெற்றி. அதுவே அழகிய பெரியவனின் வெற்றி.
அழகிய பெரியவன் கதைகள்
நற்றிணை பதிப்பகம்
எண்: 123A, புதிய எண் : 243A,
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை – 600 005
விலை : ரூ.500
பக்கங்கள்: 702 

வாசகசாலையில் அழகிய பெரியவனுக்கான நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை ஆகஸ்டு -2015

Comments