ஓட்டை வாளியில் நீர் இறைப்பவன்



பத்து மணிக்கெல்லாம் நடைசாத்தப் பழகியவர்களின்
பாழ்நிலத்தை
நாம் பாதுகாக்கத்தான்  வேண்டுமா ?

 என்று கவிஞன் லிபிஆரண்யாவின் கவிதையொன்று முடியும். அப்படியான நிலம்தான் இது. முரண்பாட்டின் முக்கோணம் இந்நிலம், அன்றாடம் அந்த முரண்பாடு நம் சட்டைபிடித்து உலுக்குகிறது. சமயங்களில் நம்மைப் பார்த்து கேலியாய் நகைக்கிறது.. பேண்ட்களையோ, உள்ளாடைகளையோ நனைக்கிறது. பாலத்திலிருந்து குதிக்கச் சொல்கிறது. கொலை செய்யச் சொல்கிறது. கேவலப்படுத்துகிறது. பின்னிரவில் எழுப்புகிறது. பேயாய் பகலில் அலைய வைக்கிறது. பிரேதங்களை வாஞ்சையோடு பார்க்க வைக்கிறது. மிருகக்காட்சிசாலை கூண்டுக்கெதிரே வெகுநேரம் நம்மை நிறுத்தி வைக்கிறது. அன்பை  நல்ல பாம்பின் நாகரத்தின கல்லாக்குகிறது.
இந்தக் கொடடூர வாழ்வை எப்படி எதிர்கொள்வது? கூட்டு தியானம் போல கூட்டு தற்கொலை சாத்தியமா?, அல்லது அன்றாடம் செத்துச் செத்து பிழைக்கலாமா?” ஊரும் சதமல்ல, உற்றாரும் சதமல்லவென சித்தனனாய் திரியலாமா? இலையென கவலையின்றி மரத்திலிருந்து உதிரலாமா? தெரு நாயாய் கண்கள் மினுங்க நடுஇரவில் குப்பை தொட்டிகளுக்கு பின் பதுங்கியிருக்கலமா? புட்டம் முழுக்க புண்ணாய் பெண்நாயாய் அலையலாமா? வெளிச்சத்துக்கு அஞ்சும் கரப்பானாய் இருள் பொந்திலேயே இருந்து விடலாமா? கண்ணாடியிடம் பேசிக் கொள்ளலாமா? போதையிலேயே தெளியலாமா?
 நாம் இந்த வினாடி வாழ்ந்து கொண்டிருப்பது இதற்கு முந்திய வினாடிவரை தற்கொலை செய்து கொள்ளாததனால்தான். இந்த நிலத்தில் உண்மையான அர்த்தத்தில் வாழ்வதற்கு அபாரமான விடுவிப்பு கொண்ட மனம் வேண்டும். எல்லாவற்றையும் கலைத்துப் போட வேண்டும் அறத்தின் எழுத்துகள் செதுக்கப்பட்டிருக்கும் சுவற்றின் மீது சிறுநீர் கழிக்க வேண்டும். பாசங்கெனும் பாம்புத் தோலை உரிக்க வேண்டும். ரங்கனாதன் தெரு நெரிசலில் கண்ணா.டிக் கோப்பை விற்கும் நெஞ்சுரம் வேண்டும். சபைகளை புறக்கணிக்க வேண்டும். மலைமுகட்டில் ஒற்றையாய் நிற்க வேண்டும். கழுவேற சித்தமாய் இருத்தல் வேண்டும்தன்னைத் தானே சிதைக்கு சுமந்து செல்லும்  தைரியம் வேண்டும்.
 மேற்கூறிய கேள்விகளையும் அதற்கான பதிலையும் ஒருங்கே எனக்கு சொல்கின்றவைகளாக  இருக்கின்றன இசையின் கவிதைகள்.
 இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவுகளை விட கூடுதலானது நமது குற்ற உணர்ச்சிகள். குற்ற உணர்ச்சிகளோடேயே பிறக்கின்றோம். வாழ்கின்றோம், சாகின்றோம். இவற்றிலிருந்து எவரேனும் என்னை விடுவிக்க மாட்டார்களா, காலில் சங்கிலி உரசி உரசி ரணமாய் இருக்கிறது. குற்ற உணர்ச்சி கனவுகளிலும் தன் வேட்டை நாயை என் மீது ஏவி விடுகிறது என்னையே தின்கிறது. என் காலடியிலே விடியும் வரை படுத்திருக்கிறது. விடிந்ததும் பொறுப்பை தொலைக்காட்சியில் அமர்ந்திருக்கும் தாடி வைத்த தாத்தாவிடம் கொடுத்துவிட்டு மறைகிறது. அவர் நாள் முழுக்க மண்டியிட்ட கோலத்தில் என் காதுகளில் எதையோ ஒதி கொண்டே இருக்கிறார். அவருக்கு அலுக்கும் பொழுது என் அம்மாவிடம் கொடுக்கிறார் ரிமோட்டை, அவள் எதிர்வீட்டு மாடியில் துணி காயப்போடும் இளம் பெண்னிடம் கொடுக்கிறாள், அவள் என் மேலதிகாரியிடம் கொடுக்கிறாள், அவர் மதுவருந்த போகும் பின்னிரவில் செக்யுரிட்டியிடம் கொடுக்கிறார், அவருக்கு தூக்கம் வரும்பொழுது கடவுளாரிடம் தருகிறார், அவர் மீண்டும் வேட்டை நாயிடம் வீசுகிறார் அது மறுபடி என்னை துரத்த ஆரம்பிக்க நான் இசையின் கவிதையோடு ஓட ஆரம்பிக்கிறேன்
 இசை தன் கவிதையால் என்னை விடுவிக்கிறான்.  வெட்டவெளியில் உப்புமிளகாயார் முன் எனக்கு ஞானஸ்தானம் செய்து வைக்கிறான். அவனுக்குப் பிடித்த பல்சரிலேயே வந்திருக்கிறான், அதை நேற்றிரவு எங்கோ கொண்டு போய் இடித்திருக்க வேண்டும், அதன் முன்பக்கம் சிதைந்திருக்கிறது அடங்காப்பிடாரி மதனும் கூட உண்டு. தலைவிரி கோலமாய் வந்தவளைப் பார்த்து தப்பிவந்த பொழுது அந்த விபத்து நடந்ததாய் என்னை நம்பச் சொல்கிறான், ஸ்கூட்டியைப் பார்த்துக்கொண்டு ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தென்கிறான் சைகையில் மதன்.  D.சிவாஜிகணேசனும், பொறியாளர் ஆனந்தும் வந்து கொண்டிருப்பதாகவும்  சில குடும்ப நாய்களை கூட்டிக்கொண்டு வருவதாகவும் சொல்கிறான். அறவுணர்ச்சி எனும் ஆட்டுக்குட்டியை அங்கு பலியிடலாமென்கிறான். நான் டம்மி இசை எங்கேயெனக் கேட்டால் என் கண்களை பார்க்க மறுக்கிறான் இயேசு நாதர் மதுவாங்கிக்கொண்டு வருகிறார். அவர்கூட தொற்றிக் கொண்டு வருகிறது குள்ளமான காதல். அழியும் சிட்டுக் குருவிகளும்,வழியனுப்பக் காத்திருக்கும் பறவையும் அவன் தோளில் அமர்ந்திருக்கிறது. எம்.கே.டியை தன் குரலில் பாடத்தொடங்குகிறான், மேயாத மான்கள் சிலிர்க்கின்றன. அவனால் கொலை செய்யப்பட்டவர்களின் ஆவிகள் எழும்புகின்றன. அவர்களிடம்யாம் ஷகிலாவின் பாதக் கமலங்களை வணங்குகிறோம்என்கிறான். இது உங்களுக்கு திருப்தியாக இல்லையெனில்கர்த்தனின் வருகை சமீபமாயிருக்கிறதுஎன்பது பொருந்தி வந்தால் வைத்துக் கொள்ளுங்கள் என்கிறான். தாமதமாய் வந்த ராமகிருஷ்னன் மகா ரப்பரால் தன் வாழ்வை திருத்தித் தரமுடியுமா என்கிறார். அதைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாது சித்தாந்தங்களின் துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு பொறாமை மிருகத்தை கையில் பிடித்தவாறு நீலிக்கோணாம்பாளையத்தின் பீக்காட்டில் நிற்கும் டாங்கிகளை நோக்கி நடக்கத் தொடங்குகிறான். ஒரு கோடியே நூற்றியெட்டு துயரங்கள் அவனை தொடர்கின்றன.
இசை நம்மை {உங்களுக்கு எற்பில்லையெனில்} என்னை  சங்கிலிகளிலிருந்tது விடுவிக்கிறான். என்னை அலட்சியம் மிக்கவனாக அகங்காரனாக, முழ்கும் கப்பலில் இருந்து குலப்பெருமை பாடுகிறவனாக,

இவர்களின் யாகசாலையின் நடுவே பன்றியை இழுத்துக் கொண்டு போகிறவனாகஓங்கார மந்திர உச்சாடனங்களுக்கு இடையே தமிழர்களுக்குப் பிடித்தமான வசவுச் சொல்லை உரத்துச் சொல்பவனாக, பரப்பிரம்மங்களை பகடி செய்பவனாக, அனுபூதி நிலை பற்றி அவர்கள் கசிந்துருகையில் கழிப்பறைக்குச் செல்பவனாக, சித்தனின் அல்லது பித்தனின் ஞானத்தை ஓட்டை வாளியில் சுமப்பவனாக, சமயத்தில் அதையே அடகு வைப்பவனாக என்னை உருமாற்றுகிறான் இசை.
பிறவியெனும் பெருங்கடலை இன்னும் பாதி கடக்க வேண்டியிருக்கிறது. மோசஸாய் முன்னே போய் கொண்டிருக்கிறான் இசை.

சிவாஜி கணேசன் முத்தங்கள் - குறித்த கட்டுரை

Comments