தம்பி நான் ஏது செய்வேணடா



இல்லறக் கல்லறை

நீயும் காதலித்தாய்
நானும் காதலித்தேன்
 ஆனால்
 நீயும் நானும் காதலித்துக் கொள்ளவில்லை

அன்று
சொத்தும் சாதியும் பிடர்தள்ள
ஒரு பார்ப்பானின்
பழைய பஞ்சாங்கம்
கரம் சேர்க்க
மணவறைக்குத்
தள்ளப்பட்டோம்

சுற்றி வந்தபோது
மனதில் பற்றிக் கொண்டது
தீ
விழிக்குத் தெரிய உனக்கும்
தெரியாமல் எனக்கும்
கழுத்தில் இறுக்கிக் கொண்டது
தாலி!
இன்று
உன் கண்ணீரால்
ஒவ்வொரு இரவும்
உப்பாகிப் போனது
உள்ளேயே அழுதழுது
கண்ணீர் அமிலம்
என்னையே அரித்துத் தின்றது

பாத்திரங்களை உடைப்பாய்
ஓசையெழ
பிள்ளைகளை அடிப்பாய்
ஓலமிட
உன் கொதிப்பின் வெளிப்பாடு!

வீசுவாய்  உணவை
வெறுப்போடு
விதியெனத் தின்பேன்
கசப்போடு
உடலோ அழைக்க
உளமோ மறுக்க
ஒவ்வொரு இரவும் நெருப்பாச்சு

புரிகிறது!
காதலுக்குக் கல்லறை கட்டும்போது
கட்டுகின்றவர்களே
உள்ளே சிக்கிப் பிணமாகிறோம்

பிறகு…
பிறகென்ன

அழுகிய பிணங்கள்
மணப்பதில்லை.
இப்படியான கவிதைகளே 90 களீல் பாரதி புத்திரனை  வாசிக்க தூண்டியவை. மதுரையில் பாரதி புத்திரனை பிரத்யேகமாக வாசிக்கும் ஒரு கூட்டம் இருந்தது. அதற்கு ஒரு தனித்த காரணமும் இருந்தது
. 1990களின் தொடக்கத்தில் மனஓசை இதழின் மொத்தத் தொகுப்பை வாசிக்க கிடைத்த பொழுது அறிமுகமானவை பாரதி புத்திரன் கவிதைகள் . இந்தக் கவிதைகள் 86லிருந்து 92க்குள் எழுதப்பட்டவையாக இருக்கலாம்.
அக்காலத்தில் பசுவய்யா, கல்யாண்ஜி, கலாபிரியா, தேவதேவன், பிரமிள், விக்கிரமாதித்யன், சமயவேல் என ஒருபுறம்.
வானம்பாடியின் தொடர்ச்சியாக புவியரசு, அப்துல் ரகுமான், மேத்தா, போன்றோர் ஒருபுறம்.
இடதுசாரி கவிஞர்களின் இன்குலாப், இளவேனில், புதிய ஜீவா, கலை நேச பிரபு, இளந்தி, தனிகை செல்வன் என ஒருபுறம்.


நீள் பாவாடை அணிந்த சிறுமிகள் தண்ணிர் இருக்கும் இடத்தை கடக்கையில் கவனமாய் தங்கள் பாவாடைகள் தூக்கிக் கொள்வார்களே அது போல தமிழ் கவிதையிலும் அரசியல் எனும்போது அப்படி நடக்கும் கவிஞர்களும் உண்டு.அவர்கள் ஒரு புறம். அவர்களுக்கு வியட்நாம் யுத்தமெல்லாம் தெரியவே தெரியாது. அவர்கள் சிவாஜி கனேசனின் வியட்நாம் வீடு மாத்திரமே அறிந்தவர்கள்

 அதற்கு பாரதிபுத்திரனின் கவிதையொன்றை பதிலாக சொல்லாம்.
ரஷ்ய அதிபர் குருச்சேவ் இந்தியா வந்த பொழுது தாஜ்மகாலை பார்க்க மறுத்தார் என்றொரு செய்தியுண்டு. குருச்சேவ் இந்த கவிதையை  போல் ஒன்றை தான் அன்றைக்கு சொல்ல விரும்பியிருப்பார்
    
சக்கரவர்த்தியுடன் ஒரு விவாதம்
குடிமகனே!
இதயத்திற்குக் காதிருந்தால்
இதனைக் கேட்பாய்!
யமுனைக் கரையில் புதைக்கப்பட்டது
ஒரு
மன்னனின் மனைவி மட்டுமல்ல
ஒரு மனிதனின் மனைவியும் கூட!

சக்கரவர்த்தி!
நெஞ்சுக்கு நேர்மையிருந்தால்
இதனைக் கேளுங்கள் !
கடலலைகளும் மண்டியிடும்
மொகலாயப் பேரரசின் முடி
உங்கள் தலைமீது
இல்லாதிருந்தால்….

பரந்து விரிந்த உங்கள் சாம்ராஜ்ஜியத்தில்
பசியால் வெந்தவோர் குடிமகனாக
இருந்திருந்தால்….
என்ன செய்திருப்பீர் மும்தாஜிற்கு?

அன்புதான் இதனை
வடித்தது

அன்பிற்குப் பின்புலமாய்
அதிகாரம் தானே
முடிந்தது

கல்லாய் நிலைத்தது
 என்
காதலல்லவா?

காதலை நிலைக்க வைத்தது
எங்கள் வேர்வையல்லவா?

அழகு?
அழியாத பேரழகு
ஆனந்தம் தரவில்லையா?

பட்டுப் புடவையின் பளபளப்பிற்குள்
நெய்யப்பட்டிருப்பது உயிர்களல்லவா?

மலர்களைப் பறித்தே
அலங்காரம்
மலர்களைச் சொருகித்தான்
அலங்கரித்தீர்
ஆனால்
சொருகப்பட்டது
எங்கள் மண்டையோட்டில் சக்கரவர்த்தி

இறந்தவளை இதனால்
இறவாமல் வாழ வைத்தேன்

செத்தவளை வாழ வைக்க
வாழ்ந்தவரைச் சாகடித்தீர்

நிலா வந்து பாலூட்ட
நீரலைகள் தாலாட்ட
கல்லறைத் தொட்டிலிலே
கண்வளர்கிறாள் என் மும்தாஜ்!

சாட்டையால் அடிக்கப்பட்டு
கட்டைவிரல் வெட்டப்பட்டு
இதனைக் கட்டச் செத்தவரை
எங்கே புதைப்போம் சக்கரவர்த்தி?

என்
கனவின்
கவிதை இது

எங்கள்
உயிரின்
ஓலம் இது

 இன்னும் சில கவிதைகள் உண்டு

நடுத்தட்டு

அடித்தட்டைப் பார்த்து
அச்சப்படும்
மேல்தட்டைப் பார்த்து ஆசைப்படும்

அதனால்
இடறி விழுந்து விடாமல்
நின்று கொண்டு
எட்டிப் பிடிக்க
எத்தனிக்கும்

தான் மட்டும் துயரப்படுவதாய்த்
தனித்து நோக்கும்
கண்ணீர்க் கடலில்
தன் துளி தேடும்

போராட்டம் என்றதும்
பெற்றவள் மனைவி பிள்ளையின் முகங்கள்
சோகமாய்த் தெரியச் சோர்ந்து முடங்கும்
வேலையும் பென்சனும் பஞ்சப் படியும்
நினைவுத் திரையில் நீந்த மயங்கும்
ஒரு நாளேனும் ஊதியம் இழப்பதாய்க்
கனவில் காணினும் சிறுநீர் பிரியும்

ஒருநாள் போராடத் தயங்கி
ஒவ்வொரு நாளும் போராடும்
வாழ்வுக்காகப் போராடத் தயங்கி
வாழ்க்கையுடன் போராடும்

சாவதற்காகப் பிழைத்துக் கொண்டு
பிழைப்பதற்காகச் செத்துக் கொண்டு!

4
அகிம்சை பேசு
கையில் கத்தி இருக்கிறதா?
ஆடுகளிடம் அகிம்சை பேசு
வெட்டும் வரைக்கும்
முட்டாதிருக்கட்டும்
5
சின்னச் சின்னப்
பாம்புகள் கூடச்
சீறிச் சீறிச் கடிக்கின்றனவே
ரேஷன் கடை வாசலில்
இத்தனை பெரிய பாம்புகள்
செத்தா கிடக்கின்றன.
  
வெறும் சமூக கோபம் மாத்திரம் கொண்ட் பெந்தகோஸ்தே தன்மை பாரதிபுத்திரனிடம் இல்லை
வெற்றுச்சாட்சி
எந்தக் கும்பலில் இருந்தவன் நான்?
சிலுவை நடந்த கல்வாரிப் பாதையிலா
விஷம் குடித்த கிரேக்கர்கனைச் சூழ்ந்து நின்ற கூட்டத்திலா
வ.உ.சியை சிறைக்கு வழியனுப்பிய கும்பலிலா
வாஞ்சியின் உடல்பாக்க வந்திருந்த பேர்களிலா
இல்லை
எல்லாக் கும்பலிலும்
இருந்தது நாந்தானா?

7
செய்
மீன் பிடிப்பவனைச் சுடாமல்
வேடிக்கை பார்ப்பவனைப்
பொசுக்கும்
வெயில்

இறங்கிக் குளிப்பவனுக்கு இல்லாமல்
கரையில் நிற்பவனுக்குக்
குளிரும்
தண்ணீர்
நனையாமல்
 நீருக்குள்
 கிடக்கிறது நிலா


கட்டிக்கிடக்கின்ற படகை
தொட்டு தொட்டு
 அழைக்கிறது அலை


அபாரமான காதல் கவிதைகளும் உண்டு
சாகாமல் உன் இறந்த வடிவம்

கந்தல் புடவை தைக்கும் கிழவியின்

நடுங்கும் விரல்களாய் ஞாபகங்கள்
உறைந்தவை கசிந்து சொட்ட
மெல்ல மெல்ல
என் மெளனத்தில்
ஓயாத உன் கடல்

எத்தனை முறையழித்தாலும்
உன்னையே பின்னி
ஈயாகவும் சிக்கும்
மன விசித்திரம் வெறுத்து

ஒருமுகம் தெரியுதென்று உடைந்த கண்ணாடிச் சில்லுகள்
ஒவ்வொன்றிலும் முகம்

அந்தியின் மஞ்சளில்
கடைசியாய் நிமிர்ந்து பார்த்த
கனத்த விழிகள்….
இத்தனை பொழுதுகளுக்கு பின்னும்

என் கையிலிருந்து நழுவிப் பிரித்த
மருதாணி விரல்கள்

மெல்லிய நீ தந்த
ஞாபகச் சம்மட்டிகள்

ஆனாலும் இனியொன்றும் உன்னைப்
பேருந்தில் விழாவில் சாலை நெரிசலில்
சந்தித்துவிடக் கூடாது நான்

உன் இறந்த கால உருவத்தை
என்
சாம்பல் கிளறி எடுத்துக் கொள்ள வேண்டும் நீ

மதுரையில் பாரதி புத்திரனை பிரத்யேகமாக வாசிக்கும் ஒரு கூட்டத்திற்கான   காரணம் . பாரதி புத்திரனின் பிரகடனமில்லாத அரசியல் சமூக கவிதைகளே அப்படியான பிரத்யேக ஈர்ப்புக்கான காரணம். இடதுசாரிக் கவிஞர்கள் அல்லது இடதுசாரி சாய்வு கொண்டவர்கள், கோசங்களை மாத்திரமே எழுதக் கூடியவர்கள் சுவர் எழுத்துகளையே கவிதை என நம்புகின்றவர்கள் அதையே பிரசுரிக்கவும் செய்கிறார்கள் என சொல்லப்படுவதுண்டு. அதில் பெருமளவில் உண்மையும் உண்டு.  
பாரதிபுத்திரனின் பிரத்யேகத் தன்மை கோஷங்கள் இல்லாமல் சமூக அவலங்களையும் துயரங்களையும் எழுதியதுதான். அவ்வகையில் அவர் முன்மாதிரி இல்லாதவர். .

கோர்பசேவின் பெரிஸ்தோரோஸ்ய்க்கா, [அதை இடதுசாரிகள் உச்சரித்து பழகுவதற்குள் என்னென்வோ நிகழ்ந்து விட்டது] ரஷ்யாவில் நிகழ்த்திய மாற்றங்கள் அல்லது துயர்மிகு வீழ்ச்சிகள், தியான்மென் சதுக்கங்களில் உருண்ட பீரங்கிகள் தமிழ் நாட்டு தீவிர இடதுசாரி இயங்கங்களின் மீதும் ஏறி இறங்கி விடுகின்றன. பெருமளவில் இயக்கங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. மனஓசை போன்ற பத்திரிகைகள் நின்று போகின்றன.

பாரதிபுத்திரனையும் கவிதையில் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை.
 இக்கால கட்டத்தில் அவர் சென்னை கிருத்துவக் கல்லூரியில் இருந்து கிழக்கு நோக்கி போகத் தொடங்குகியவர். மாமல்லபுரத்தில் போய் நிற்கிறார். கடல் அருகே இருக்கும் சிற்பங்களுடன் பேசத்தொடங்குகிறார். முனைவர் பாலுச்சாமியின் ஆய்வு நூல்கள் வெளிவரத் தொடங்குகின்றன.
நாயக்கர் கால ஓவியங்கள்,  சிற்பங்கள் என அவரது ஆய்வுப்புலம் விரிவடைகிறது.
தமிழின் கூரிய ஒரு கவிஞனை ஆய்வாளனாய் ஆக்கியதற்கு யார் பொறுப்பு. இதற்கு சந்தோஷப்பட வேண்டுமா துக்கப்பட வேண்டுமா? கவிஞன் ஆய்வாளன் ஆவது பரிணாம வளர்ச்சியா? பாரதி புத்திரனிடம் கேட்டால் அவர் தனது நூலின் பெயர் ஒன்றை பதிலாகச் சொல்லக்கூடும் ‘தம்பி நான் ஏது செய்வேன்னடா’
எம்மை போன்றோர் அவரை மறுபடியும் மறுபடியும் அழைப்பதுண்டு அவர் கவிதைக்கு திரும்பவேண்டுமென அவருடைய பிரத்யேகமான புன்னகையுடன் ‘செய்யனுங்க’ என்பார். நான் விளையாட்டாக கேட்பேன் ‘என்ன தோழர் பாட்ஷாவா மும்பையில வேன எரிச்சிட்டு இப்படி மாணிக்கமா கிழக்கு தாம்பரத்துக்கும் சேலையூர்க்கும் இடையில நடந்துகிட்டிருக்கீங்களே’ அதற்கும் புன்னகைதான் பதில்.
ஆனால் அந்தப் புன்னைகையின் பொருள் ஆழமிக்கது துயர்மிக்கது.
அவர் மாரிக்கால இரவுகள் தொகுப்பில் இப்படி ஒருகவிதை உண்டு.

எப்போதும் சந்திப்போம்
இதயத்து மறைவிடங்களை இடித்து விடுவோம்.

எப்போதும் இதழ்களில்
பூத்திருக்கட்டும் ஒரு புன்னைகை

அணைத்துக் கொள்ளவும் தட்டிக் கொடுக்கவும்
தயாராக இருக்கட்டும் கைகள்
திருமண நாளில் வாழ்த்துச் சொல்லும்போதும்
போராட்ட களத்தில் நம்பிக்கை சொல்லும்போதும்

உண்மையாய் ஒலிக்கட்டும் ஒரு சொல்

மலர்களோடு வரவேண்டும் நீ
கனிகளோடு வழியனுப்ப வேண்டும் நான்

அந்திநேரத்து மங்கும் ஒளியாய் இந்த நாட்கள்

உனக்காகத் தீபம் கொண்டு உன் வீடு வரும் வழியில்
நீயும் எதிர்ப்படு அதேபோல

நம்மைச் சூழ்ந்து
நாம் எப்போதும் இருப்போம் காற்றுப் போல

என் இனியவனே!
மனிதனின் இறுதி இலட்சியம்
மனிதனாக ஆவதுதான்.

நான் பாரதிபுத்திரனின் மாணவன் இல்லை.  அவர் நடத்திய வனத்திற்கு போனதுமில்லை. எனக்கு அவர் எப்போதும் தோழர் பாரதி புத்திரனே. இந்தக் கால்நூற்றாண்டு கால தோழமையில் அதிகபட்சம் அவரை பத்துமுறைக்குள்தான் சந்தித்திருப்பேன் தொலைபேசியில் இதைவிட கூடுதலாக இரண்டு முன்று முறை பேசியிருப்பேன். எனக்கும் அவருக்குமான ஒரே தொடர்புக் கண்ணி மாரிக்கால இரவுகள் தொகுப்பு மாத்திரமே. 93இல் ஒரு மழை மாலையில் அவரை முதன்முதலாய் சந்தித்ததில் இருந்து அல்லது முதல் முதலாக அவர் கவிதையை படித்ததில் இருந்து அவர் என்னோடு இருக்கிறார்.
தொகுப்பின் பின் அட்டை கவிதை நம்மிடம் இப்படி பேசும். 

முந்தானைக்குள் புதைத்த முகத்தில்
குமுறும் கண்ணீரோ

கட்டப்பட்டு அடிப்படும் விலங்காய்
நெளிந்து முணங்கிச்
சுருளும் ஜீவனின் வலியோ

உள்ளிழுக்கும் நீரில்
இறுதிமுறையாய் மேல்வந்து தத்தளித்து
வான் உதிர அலறும் உயிரின் ஓரமோ

எது தந்தவை இவை?
எரியும் ரணங்களிலிருந்து
வழிகின்றன சொற்கள்.

மிக உறுதியாக தோழர் இந்த இருபத்தேழு வருடமாய்
எரியும் ரணங்களிலிருந்து வழிந்து கொண்டேயிருக்கின்றன
உங்கள் சொற்கள்
உங்கள் சொற்கள்

நன்றி வணக்கம்

பாரதி புத்திரன் பணி நிறைவு பாராட்டு விழாவில் ஜூன்16 2017இல் வாசித்த கட்டுரை

Comments